காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளைச் சேர்ந்த 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள். மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 மாணவ, மாணவியர் பயன்பெறுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிபடுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த ‘முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும், வரும் கல்வி ஆண்டில் அதனை அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்துவதற்கான பணிகளை தீர்மானிக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். காலை சிற்றுண்டித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் வழங்கியுள்ளார்.