விபத்திலிருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்... ஓமலூரில் பரபரப்பு

விபத்திலிருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்...  ஓமலூரில் பரபரப்பு

சேலம் ஓமலூரில் முதல்வர் ஸ்டாலின் சென்ற சாலையில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம், திடீரென உடைந்து விழுந்துள்ளது. முதல்வரின் கார் சிக்னலை கடந்து சென்ற சில நிமிட இடைவெளியில் சிக்னல் கம்பம் உடைந்து விழுந்ததால், இந்த விபத்திலிருந்து முதல்வர் தப்பியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

சமீபத்தில் வேலூர் சென்று வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் திட்டங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையொட்டி சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்ற முதல்வர், அங்கியருந்து காரில் ஓமலூர் பேருந்து நிலையம் வழியாக ஓமலூர் தாலுக்கா அலுவலகம் சென்றார். அங்கு ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு, ஓமலூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி மாணவிகளை சந்தித்தார்.

ஆய்வு பணிகளை முடித்துக்கொண்ட முதல்வர் அதன் பின் சேலம் புறப்பட்டார். முதல்வரின் கார் சேலம் சாலையில் போக்குவரத்து சிக்னலை கடந்து சென்ற சிறிது நேரத்தில், பேருந்து நிலையத்தில் இருந்த ராட்சத போக்குவரத்து சிக்னல் கம்பம் அடியோடு சாய்ந்து விழுந்தது. கம்பத்தில் கேபிள் டிவி வயர்கள் கட்டப்பட்டு இருந்ததால், கம்பம் மெதுவாக சாய்ந்து முதல்வர் கடந்து சென்ற சாலையில் விழுந்தது. கம்பம் சாய்வதை அறிந்த மக்கள் அங்கிருந்து ஓடியதாலும், பேருந்தை உடனடியாக நகர்த்தியதாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

சிக்னல் விழுந்த தகவல் அறிந்து, ஓமலூர் போலீசார் உடனடியாக பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து உடைந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேருந்து நிலையம் சென்ற பேருந்துகளை, மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

இந்த ராட்சத சிக்னல் உடைந்து விழுந்த இடத்தில், ஓமலூர் பேருந்து நிலையத்தில் வாகன போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் நான்கு புறங்களிலும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிக்னலும் சுமார் 30 அடி உயரமும், சுமார் ஒரு அடி விட்டமும் கொண்ட ராட்சத கம்பங்கள். கடந்த இரண்டு மாதங்களுக்குதான் இவையாவும் முன்பு புதிதாக வைக்கப்பட்டது. அப்படியானவற்றில் ஒன்று விழுந்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மட்டுமன்றி, கட்டப்பட்டு இரண்டு மாதங்களேயான நிலையில் கம்பம் சரிந்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சிக்னல் சரிவதற்குச் சற்று முன்னர் தான் அந்த சாலை வழியாகப் பயணித்துச் சென்றுள்ளார். நல்ல வேளையாக முதல்வர் ஸ்டாலின் அவ்வழியே செல்லும் நேரத்தில் சிக்னல் கம்பம் சாயாமல் இருந்ததால் பெரும் ஆபத்திலிந்து முதல்வர் ஸ்டாலின் தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com