முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம்! தரவுகளின் அடிப்படையில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு !

முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம்! தரவுகளின் அடிப்படையில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிகழ்நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதத்தை குறைத்தல் மற்றும் உடனடி முடிவெடுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் முதலமைச்சரின் தகவல் பலகை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

முதலமைச்சரின் தகவல் பலகை திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வருவாய், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். தஞ்சாவூர், கோவை , மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதல்களை எவ்வித சிரமமுமின்றி வழங்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், போதுமான பேருந்துகளை இயக்குவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தார்.

காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, உள்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். வருவாய்த் துறையால் வழங்கப்படும் சாதி, இருப்பிட, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்த முதலமைச்சர், நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் அடுத்த ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம் தொடங்கிய ஓராண்டில் அரசின் திட்டங்கள் மக்களை தேடி சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மக்கள் பயன்பெறும் திட்டம் என்பதாலும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டம் என்பதாலும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நிலுவையிலுள்ள சான்றிதழ்களை அடுத்த ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

போக்குவரத்துத் துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் போதுமான அளவு இயக்கப்பட வேண்டும் என்றும், குறைவாக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக களையவேண்டும் என்றும், பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

அடுத்தபடியாக, மாநிலத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com