தீட்சிதர்கள்
தீட்சிதர்கள்

சிதம்பரத்தில் குழந்தை திருமணம்; தீட்சிதர்கள் கைது!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய குழந்தைகள், திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே, இந்த தீட்சிதர்கள் சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து வைப்பதாக புகார்கள் எழுந்து வந்தது. அண்மை சில வாரங்களாக குழந்தை திருமண புகாரில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மீண்டும் ஒரு குழந்தை திருமண சம்பவத்தில் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், சிதம்பரம் தீட்சிதர்களின் இரு குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடத்தப்பட்டது.. இந்த குழந்தை திருமண சம்பவம் குறித்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு வந்த தகவலையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைத்த காரணத்திற்காக சிறுமியின் தந்தையும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் செயலாளருமான ஹேமசபேச தீட்சிதரையும், சிறுவனின் தந்தை வெங்கடேச தீட்சிதரையும் கைது செய்த போலீஸார், இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர்.

நடராஜர் கோயில்
நடராஜர் கோயில்

முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவலறிந்த மற்ற தீட்சிதர்கள் கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலின் வாசலின் முன்பு அமர்ந்து நள்ளிரவு வரையில் சுமார் 4 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் மட்டும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 வழக்குகள் தீட்சிதர்கள் தரப்பிலானது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com