பெற்ற தாய்க்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பிள்ளைகள்!

பெற்ற தாய்க்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பிள்ளைகள்!

திருச்செந்தூரில் பெற்ற தாய்க்கு கோயில் கட்டி பிள்ளைகள் கும்பாபிஷேகம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. கல்யாணகுமார் என்பவரது மனைவி சுப்புலட்சுமி, இவர், 2021 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். அவருடைய மகள் ஜெயசங்கரி மற்றும் மகன் ராகவேந்திரா ஆகியோர் தங்களது அன்புத் தாயின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் துயரத்தில் கதறித் துடித்தனர். முடிவாகத் தங்களது துக்கத்தை சற்றேனும் ஆற்றிக் கொள்ளும் பொருட்டு தங்களது அன்புத் தாய்க்கு கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தனர். பரிவூட்டி பாசமாய் வளர்த்த அன்னைக்குத் தாங்கள் செய்தாக வேண்டிய கடமை அது என அவர்கள் எண்ணினர்.

அம்மாவுக்கு கோயில் கட்டும் எண்ணன் ஏன் வந்தது என்று மகன் ராகவேந்திரனிடம் கேட்ட போது, அவர் அளித்த பதில்;

அம்மாவுக்கு கோயில் கட்டனும்னு ஏன் நினைச்சோம்னா, நாங்க நாலுபேர், அம்மா, அப்பா, என் சகோதரி, நான்னு நாங்க நாலு பேர் இங்க திருச்செந்தூர்ல சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தோம். எங்க சந்தோசமான வாழ்க்கைக்கு காரணம் எங்க அம்மா தான். அவங்க தான் எங்களை பாசமா பார்த்துக்கிட்டாங்க. திடீர்னு கொரோனா வந்து அவங்க இறந்ததும் எங்களால அம்மாவோட இழப்பைத் தாங்க முடியல. அப்போ தான், அம்மா எங்க கூடவே இருக்கற மாதிரி நினைக்கனும்னா, எங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததிகளும் அம்மாவை நினைக்கற மாதிரி அவங்களுக்கு ஒரு கோயிலைக் கட்டி அவங்களை எங்க குலதெய்வமா நினைச்சு கும்பிடலாம்னு நானும் என் சகோதரியும் முடிவு பண்ணோம். அதுக்காகத் தான் இந்தக் கோயில். கோயில் கட்டறதோட இல்லாம, அம்மா பெயர்ல சுப்புலட்சுமி அறக்கட்டளைன்னு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சு அதன் மூலமா திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில இருக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கலாம்னு முடிவெடுத்திருக்கோம். எங்க அம்மாவோட அருள் அதை எங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கும்னு நாங்க நம்பறோம்.

-என்றார்.

திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டணம் பகுதியில் சுப்புலட்சுமி கார்டன் என்ற பெயரில் ஒரு பகுதியை உருவாக்கி அங்கு சுமார் 3000 சதுர அடி நிலப்பரப்பில், 40 லட்ச ரூபாய் செலவில் அவர்களது தாய்க்கு, அன்னை சுப்புலட்சுமி என்ற பெயரில் கோயில் எழுப்பியுள்ளனர்.

மேலும் அங்கு சுபலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கத்தையும், ராஜ கணபதி என்ற பெயரில் விநாயகரையும் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com