கோவையில் பிரபலமாகும் களிமண் குளிர்சாதனப் பெட்டி

கோவையில் பிரபலமாகும் களிமண் குளிர்சாதனப் பெட்டி

Published on

கோவையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் களிமண்ணில் தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை இயக்க மின்சாரமே தேவையில்லை என்பதால் மக்களிடையே இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. தற்போது மாநிலம் முழுவதுமே அடிக்கடி பவர்கட் பிரச்சனை வேறு இருப்பதால் இந்த குளிர்சாதனப்பெட்டிக்கான மவுசு மேலும் அதிகரித்திருக்கிறது.

களிமண், தண்ணீர் இந்த இரண்டே விஷயங்கள் மட்டுமே போதும் இதைத் தயாரிக்க. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த சாதனத்தில் சுமார் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை காய்கறிகள் மற்றும் பழங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். தற்போது புழக்கத்தில் இருக்கும் மின்சார குளிர்சாதனப் பெட்டிகளின் விலையுடன் ஒப்பிடும் போது இதன் விலையும் ரொம்பக் குறைவு தான். கோவையில் இது ரூ.8500 க்கு கிடைக்கிறது.

இதை இயக்க தண்ணீர் மட்டுமே போதும். களிமண் குளிர்சாதனப்பெட்டியின் மேற்புரத்தில் ஒரு பாக்ஸ் போன்ற அமைப்பு இருக்கிறது, அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறார்கள். அந்தத் தண்ணீரும் வீணாவதில்லை. அதை நாம் அருந்திக் கொள்ளலாம் என்கிறார்கள். அத்துடன் மேலே உள்ள தண்ணீர் ஆவியானதும் மீண்டும் அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டால் போதும் அது தான் இதற்கான ரீசார்ஜ்.இதைச் சுத்தம் செய்ய வேண்டுமானால், பெட்டியின் கீழ் பகுதியில் இருக்கும் ஒரு திறப்பைத் திறந்தால் போதும் தண்ணீர் வடிந்து வெளியேறி விடுமாம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது என்பது இதன் பிளஸ்பாயிண்ட்டுகளில் ஒன்று.

நாம் வழக்கமாகப் பயன்படுத்தி வரும் விலை அதிகமுள்ள மின்சார குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்து கசியும் குளோரஃப்ளோரோ கார்பன் உடல்நலனுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது என்பதோடு அது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது அல்ல என்பது உலகறிந்த உண்மை. அதோடு ஒப்பிடுகையில் இந்தக் களிமண் குளிர்சாதனப் பெட்டியானது வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com