சி.எம்.டி.ஏ தொழில்நுட்ப சிக்கல்கள். ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் நேரில் போய் விளக்க வேண்டும்!

சி.எம்.டி.ஏ தொழில்நுட்ப சிக்கல்கள். ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் நேரில் போய் விளக்க வேண்டும்!

புதிய தொழில்நுட்பம் எப்போதும் நம்முடைய பணிகளை எளிதாக்கும் இடத்தில்தான் இருந்து வந்திருக்கிறது. இணையவழி சேவைகள், இருக்குமிடத்தில் இருந்தே அனைத்தையும் செய்து முடிக்க முடியும். பணிகளையும் துரிதமாக செய்ய முடியும் என்கிற நிலையில் சி.எம்.டி.ஏவில் மட்டும் கூடுதல் சவால்களை தந்திருக்கிறது.

சி.எம்.டிஏ என்னும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுவம், புதிதாக வீடு கட்டுபவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கும் இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருந்தது. 5000 சதுர அடிக்கு உட்பட்ட கட்டுமானங்களக்கு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திலேயே அனுமதி பெற முடியும். 5000 சதுர அடியை தாண்டினால் மட்டுமே தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டியிருக்கும் என்பது சி.எம்.டி.ஏவின் விதி குறிப்பிடுகிறது.

நடைமுறையில் இவை பின்பற்றப்படவில்லை. மண்டல அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் ஒரு சாதாரண பிரச்னையை கூட தீர்க்காமல் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பிவிடுகிறார்கள். அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலமாகவே தாக்கல் செய்தாக வேண்டும்.

கட்டுமான திட்டத்தின் அனுமதிக்கான விண்ணப்பங்களோடு வரைபடங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இணையம் முலமாக விண்ணப்பிப்பதுதடன் அதற்கான ஆய்வுகளையும் கணிணி வழியாகவே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், என்னதான் ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்தாலும் அதையும் பிரிண்ட் எடுத்து மறுபடியும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.

கட்டிட அனுமதிக்கான வரைபடங்களை சரிபார்க்க சி.எம்.டி.ஏ டிசைனிங் மென்பொருளை பயன்படுத்துகிறது. கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் எத்தனை இடைவெளி விடப்பட்டுள்ளது. கழிவு நீர் அகற்றும் குழாய்கள் எங்கே அமைக்கப்பட்டுள்ளன, குடிநீர் குழாய்கள் எங்கே அமைக்கப்பட்டுள்ளன. லிப்ட் இருந்தால் அது எங்கே அமையப்போகிறது போன்ற அடிப்படை விஷயங்களை எளிதாக சரிபார்க்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.

சி.எம்.டி.ஏவின் விதிகளுக்கு உட்பட்டு வரைபடத்தில் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுளளதாக என்பதை மென்பொருள் மூலமாகவே சரிபார்க்க வேண்டும். ஆனால், புதிய தொழில்நுட்பம் அதிகாரிகளுக்கு கைவரவில்லை.

கணிணியின் கட்டிட வரைபடங்களை சரிபார்க்க திணறுகிறார்கள். இதனால் அனுமதி தருவதில் கூடுதல் நேரமாகிறது. டிஜிட்டல் மயமாக்கும்போது ஊழியர்களுக்கும் அது குறித்த முறையான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

அனைத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றவேண்டும் என்பது இலக்கென்றாலும் அது ஏதாவது ஒரு விதத்தில் அரசு நிர்வாகத்திற்கோ, பொதுமக்களுக்கோ உதவுவதாக இருக்கவேண்டும். சி.எம்.டி.ஏவின் தற்போதைய நடைமுறை, இன்னும் சிக்கலாக்குகிறது.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலும், பிரிண்ட் எடுத்துக்கொண்டு போய் அதிகாரிகளை நேரில் பார்த்து விளக்கம் சொல்லித்தான் அனுமதி வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. டிஜிட்டல் அப்ரூவல் என்பது இதுதானோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com