சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கழன்றது !

சேரன் எக்ஸ்பிரஸ்
சேரன் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த ‘சேரன்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், திருவள்ளூர் அருகே தனியாக கழன்றன. உடனே ரயிலை நிறுத்தி, ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு 'சேரன்' விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், நேற்று முன்தினம் இரவு, 10:10 மணிக்கு, சென்னை சென்டரலில் இருந்து, 23 பெட்டிகளில், 1,000க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்டு சென்றது.

இரவு 11:00 மணி அளவில், புட்லுார் - திருவள்ளூர் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, 'எஸ் -7, எஸ் - 8' பெட்டிகளுக்கு இடையே பலத்த சத்தம் கேட்டது.

பயணியர் அதிர்ச்சியடைந்து, அலறி, வெளியில் எட்டிப் பார்த்தபோது, எஸ் - 7 பெட்டியில் இருந்து, எஸ் - 8 பெட்டி தனியாக கழன்றது. இதில், எஸ் - 8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின.

சத்தத்தைக் கேட்டதும் சுதாரித்த ரயில் ஓட்டுனர், ரயில் பெட்டி கழன்றதை அறிந்து, ரயிலை மெதுவாக இயக்கி, திருவள்ளூர் ரயில் நிலையத்தின், நான்காவது நடைமேடையில் நிறுத்தினார்.

ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள் வந்து பார்த்ததில், இரண்டு பெட்டிகளுக்கான இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டதால், பெட்டி கழன்றது தெரிந்தது.

பெரம்பூர் கேரேஜில் இருந்து, புதிதாக இணைப்பு கொக்கி கொண்டு வரப்பட்டு, இரு பெட்டிகளையும், ஊழியர்கள் இணைத்தனர்.சீரமைப்பு பணி முடிந்து, மூன்று மணி நேரம் தாமதமாக, சேரன் எக்ஸ்பிரஸ் கோவை நோக்கி புறப்பட்டது.

திருவள்ளூர் அருகில் செல்லும்போது, வழக்கமாக அதிவேகமாக செல்லும் இந்த ரயில், நேற்று முன்தினம் குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுனரின் சாமர்த்தியமான செயலாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com