பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

ஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், ’தஞ்சை மாவட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு, வடசேரி, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆயத்தப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வு தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்டினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும், இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, விவசாயிகளின் வருங்கால நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆயத்தப் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, ’விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமல்ல, போராட்டக் களத்தில் நான்தான் முதல் ஆளாக நிற்பேன். என் நிலத்தை இழந்தால் என் வளத்தை இழப்பேன். என் வளத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். இந்த அரசுகள் தீர்ந்து போகின்ற வளங்கள் மீதே கை வைக்கின்றன. நிலக்கரியை இன்னும் எவ்வளவு காலத்துக்கு எடுப்பீர்கள். ஒரு அடிப்படை அறிவற்ற கூட்டத்திடம் நாட்டை கொடுத்துவிட்டு மீத்தேன், ஈத்தேன் என மாறி மாறி தோண்டித் தோண்டி பூமியை நாசம் செய்கிறார்கள். எந்த மாநிலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறது? மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது’ என்று கூறி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர்  பதிவில், ’மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம். விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு. ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம்  அமைக்கப்போவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிப்பதை விட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com