தொடரும் ஐ.ஐ.டி தற்கொலைகள் - மன அழுத்தத்திற்கு பலியாகும் மாணவர்கள்?

தொடரும் ஐ.ஐ.டி தற்கொலைகள் - மன அழுத்தத்திற்கு பலியாகும் மாணவர்கள்?

சென்னை ஐ.ஐ.டி.யில் இன்னொரு மாணவர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஐ.டி வளாகத்தில் அடிக்கடி தொடர்ந்து வரும் மர்ம மரணங்களைத் தொடர்ந்து இன்னொரு மரணமும் நிகழ்ந்திருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஸ்டீவன் சன்னி ஆல்பட் (வயது 25). மகராஷ்டிராவை சேர்ந்தவர். கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் முதுநிலை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். சில நாட்களாக படிப்பில் சரியாக கவனம் செலுத்தமுடியாத காரணத்தால் தவித்து வந்தாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஸ்டீவன் சன்னியின் அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. அறை உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ஸ்டீவன் சன்னி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, அறைக்கதவை உடைத்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்டீவன் சன்னியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 மாதமாகவே ஸ்டீவன் சன்னி வகுப்புக்கு சரியாக போகவில்லை. சரியாக படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விகேஸ் (21) என்ற மாணவரும் சரியாக படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த பாத்திமா தற்கொலை செய்துகொண்டார். பின்னர் எரிந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த இன்னொரு மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ஐ.ஐ.டி நிர்வாகம் இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் தரப்படவில்லை

சென்னை ஐ.ஐ.டி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. ஐ.ஐ.டி வளாகத்தில் ஜாதியப் பாகுபாடு, மொழி பாகுபாடு நிறைந்திருப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பேராசிரியர்களால் தரப்படும் அதிக மனஅழுத்தம் போன்ற சம்பவங்களாலும் அதிகமான தற்கொலைகள் ஏற்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மட்டும் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com