சீர்காழியில் கிடைத்த செப்புப் பட்டயங்கள் - இதுவரை பதிப்பில் இல்லாத திருமுறைப் பதிகங்களா?

சீர்காழியில் கிடைத்த செப்புப் பட்டயங்கள் - இதுவரை பதிப்பில் இல்லாத திருமுறைப் பதிகங்களா?

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் யாகசாலை அமைக்க தோண்டும்போது கிடைத்த சோழர்கால ஐம்பொன் சிலைகளும் கூடவே கிடைத்த நூற்றுக்கணக்கான செப்புப் பட்டயங்களும் தமிழக தொல்லியல்துறை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சட்டைநாதர் கோயிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. யாகசாலை கட்டுவதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலின் உட்புறத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது ஏராளமான ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டன.

கூடவே 400க்கும் மேற்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவாரச் செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுதான் தமிழக தொல்லியல் வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.

டெல்டா பகுதிகளில் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளை தோண்டும்போது ஐம்பொன் சிலைகள் கிடைப்பதுண்டு. கருங்கல் சிலைகள் முதல் வெண்கலைச் சிலைகள் வரை அனைத்து விதமான சிலைகளும் இதுவரை கிடைத்து வந்திருக்கின்றன. ஆனால், சோழர்க காலக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஐம்பொன்சிலைகளும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை.

நடராஜர் தவிர்த்து அனைத்து திருவுருவங்களும் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. கூடுதலாக கிடைத்துள்ள ஏராளமான செப்புப் பட்டயங்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ள திருமுறைப் பாடல்களும் வரலாற்று ஆர்வலர்களை கவனிக்க வைத்திருக்கின்றன.

தேவாரத் திருமுறைகளை செப்பேடுகளில் எழுதி வைத்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இப்போதுதான் முதன்முறையாக திருமுறைகள் எழுதப்பட்ட செப்பேடுகள் பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 4 அடி நீளமும், 1/2 அடி அகலமும் உள்ள செப்பேடுகளில் திருஞானசம்பந்தப் பெருமானின் அருட்திருப்பதிகங்கள் பொறிக்கபட்டுள்ளன. அனைத்தும் சீர்காழிப் பதிகத்தை சேர்ந்த பாடல்கள் என்றாலும் இதில் ஏதாவது புதிய பதிகங்கள் இருக்கிறதா என்பது குறித்த ஆராய வேண்டியிருக்கிறது.

இதுவரை கண்டெக்கப்பட்டுள்ள செப்புப் பட்டயங்களை ஆய்வு செய்ததில் சீர்காழி தலத்திற்காக திருஞான சம்பவர் பாடிய தேவாரப் பாடல்களாக இருப்பதாக தெரிகின்றன. குறிப்பாக ஒரு செப்பேட்டில் வெங்குருப் பதிகம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செப்பேட்டில், முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ள ‘காலை நன்மாமலர் கொண்டு’ என்ற பதிகத்தின் கடைசித் திருப்பாடலான, ‘விண்ணியல் விமானம்’

என்பதின் கடைசி வரியான, ‘விமானம் கொடுவர ஏறி வியனுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே’ என்ற வரிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

தமிழக அகழாய்வு வரலாற்றில் செப்புப் பட்டயங்களும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கின்றன. இதுவரையிலான சைவ சமயத்தைச் சேர்ந்த பன்னிரு திருமுறை நூல்களை ஓலைச்சுவடிகளாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜராஜசோழன் காலம் தொடங்கி சமகாலம் வரை ஏராளமான தேவாரப் பதிகங்கள் கிடைத்திருக்கின்றன.

தேவாரப் பதிகங்களை செப்பேட்டில் பதிவு செய்து, அவை நமக்கு படிக்க கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. ஏறக்குறைய நூற்றுக்கணக்கான செப்பட்டயங்களில் திருமுறைகள் செதுக்கப்பட்டிருப்பதால் ஓலைச்சுவடிகளில் மட்டுமல்ல செப்புப் பட்டயங்களிலும் செதுக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com