வீரபாண்டிய கட்டபொம்மன் மரணம் குறித்த செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு!
தமிழக அரசு சுவடி திட்டப் பணிக்குழுவைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், எட்டீஸ்வரர் கோயிலில் செப்புப் பட்டயம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான 12 பேர் கொண்ட அந்தக் குழுவினர் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், போன்றவற்றப் பாதுகாத்து பராமரித்து நூலாக்கம் செய்வதற்காக தமிழக அரசு அமைத்த திட்டப் பணிக்குழுவில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது பணியின் ஒருபகுதியாக எட்டயபுரம் கோயிலில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இந்த ஆவணம் சிக்கியிருக்கிறது.
அந்த செப்புப் பட்டயத்தில், “வீர பாண்டிய கட்டபொம்மனுக்கும், அவரது கருவூல அதிகாரியான சிவசுப்ரமணியப் பிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரருக்கு சகோதரரும், காரியஸ்தருமான செளந்தர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, அந்த பட்டயத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறித்த மேலும் பல தகவல்களும் கூட இடம்பெற்றுள்ளன என திட்டப்பணிக் குழுவினர் தெரிவித்தனர்.
எட்டீஸ்வரர் கோயில் சுவரின் முன்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ள செப்புப் பட்டயத்தை ஆராய்ந்த போது , அதில் கட்டபொம்மனை கொலை செய்தது குறித்து ஆங்கிலேயர் விளம்பரம் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய தகவல்கள் இடம் பெற்றுள்ளமை தெரிய வந்திருக்கிறது. இந்த செப்பு பட்டத்தயத்தை ஆங்கிலேய ராணுவ படைத்தளபதி மேஜர் பானர் மேன். 20.10.1799-ல் ஆண்டில் எழுதச் செய்திருக்கிறார். - என திட்டப்பணிக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும் இந்தச் செப்பேடு மூலமாக அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த செப்பு பட்டயத்தில் “ ஆங்கிலேயேர் உத்தரவுப்படி திருநெல்வேலி சீமைகளில் எனது பாளையத்த இழக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான், ஆங்கிலேயரிடம் இருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததால், இவர்களின் பாளையப்பட்டுக்களை ஆங்கிலேயர் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணி பிள்ளை, நாகாலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும், காரியஸ்தனுமான சவுந்திர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்...
ஆங்கிலேயரின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததால் கட்டபொம்மன் கொல்லப்பட்டதாகவும், கட்டபொம்மனுக்கு ஆதரவாக இருந்தவர்களும் கொல்லப்பட்டதாகவும் சுவடி திட்டக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். கட்டபொம்மன் கொல்லப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு இந்த செப்புப் பட்டயம் எழுதப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பீரங்கிகள், வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருப்போருக்கும் தண்டனை விதிக்கப்படும் அந்த செப்பு பட்டயத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.