வரி வசூலிக்க மறந்து புடவைகளை ரசித்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள்!

வரி வசூலிக்க மறந்து புடவைகளை ரசித்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள்!

கரூர் மாநகராட்சி வரி வசூல் கவுண்டர்களில் மக்கள் பணம் செலுத்தக் காத்திருந்த நேரத்தில் அங்கு பணியிலிருந்த மூன்று பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு ஆண் ஊழியர் உட்பட நால்வர் வரி கட்ட வந்த பொதுமக்களை அரை மணி நேரத்திற்கும் மேலாகக் காக்க வைத்து விட்டு உட்புற கவுண்டர் ஒன்றில் புடவை வியாபாரி ஒருவரிடம் புடவைகளை எடுத்துக்காட்டச் சொல்லி ரசித்துக் கொண்டிருந்தனர். இது அங்கு காத்திருந்த பொதுமக்களை கோபத்தில் ஆழ்த்தியது.

மாநகராட்சி வரி வசூல் பிரிவினர் அரசு சார்பாக தெருத் தெருவாக ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டிக் கொண்டு வந்து வரி கட்டச் சொல்லி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துச் செல்லும் காட்சியைப் பல சமயங்களில் நாம் எல்லோரும் கண்டிருக்கிறோம். அப்படியான சூழலில், பொதுமக்கள் தாமே பொறுப்பாக முன் வந்து மாநகராட்சி அலுவலகத்துக்கே சென்று வரிசையில் நின்று பணம் கட்டத் தயாராக இருக்கும் போதும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவர்களைக் காக்க வைத்து விட்டு வேலை நேரத்தில் கொஞ்சமும் வேலை பற்றிய அக்கறை இல்லாது புடவை வியாபாரியை வரவழைத்து, இந்தச் சேலையைக் காட்டுங்கள், அந்தச் சேலையைக் காட்டுங்கள் என்று விதம் விதமாக புடவைகளை ஆராய்ந்து கொண்டிருந்த காட்சியானது பொதுநலவிரும்பிகள் சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் இடம்பெறும் நபர் ஒருவர், வரி கட்டுவதற்காக அரைமணி நேரமாகக் காத்திருக்கிறேன், யாரும் இங்கு வந்து கவுண்டரில் உட்காரக் காணோம். உள்ளே எட்டிப் பார்த்தால் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா? என்கிறார்.

அரசு இயந்திரம் எப்படி பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் மோசமான உதாரணங்கள் ஆகி விடக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com