கடலூர் கலாட்டா… வீட்டுக்குள் புகுந்தது நல்ல பாம்பு... பெண்கள் செய்த செயலைப் பாருங்க...

கடலூர் கலாட்டா… வீட்டுக்குள் புகுந்தது நல்ல பாம்பு... பெண்கள் செய்த செயலைப் பாருங்க...

கடலூர் முதுநகர் கிளைவ் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வீட்டின் சமையலறைக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த பாம்பு நேரே சமையலறைக்குள் புகுந்து அங்கிருந்த சிமெண்ட் அலமாரியில் சுருண்டு படுத்துக் கொண்டது. நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டதும் அலறியடித்துக் கொண்டு ஆறுமுகம் குடும்பத்தினர் பாம்புப்பிடி வீரர் செல்லாவுக்குத் தகவல் அனுப்பினர்.

செல்லா வீட்டுக்குள் சென்று பாம்பைத் தேடும் போது அது சமையலறை அலமாரியில் இதமாகச் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டார். எங்க போய் படுத்திருக்கு? பாருங்க! என்றவாறு அவர் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடிக்கும் உத்திகளைப் பற்றி யோசித்தார். நல்ல பாம்பை கழுத்தைப் பிடித்துத் தூக்கினால் அது நம் கையில் ஒரே போடாகப் போட்டு விடும் என்பது தொழில்முறை பாம்புப்பிடி வீரருக்குத் தெரியாதா என்ன? அதனால் அவர் பாம்பின் முகத்துக்கு நேரே வேறொரு பொருளைக் காட்டி அதனைக் கவனம் சிதறச் செய்து விசுக்கென அதன் வாலைப் பற்றித் தூக்கினார். இப்போது பாம்பால் ஒரு அளவுக்கு மேல் மேலேறிச் சென்று தன்னைப் பிடிப்பவர்களைத் தீண்ட முடியவில்லை. அது அப்படியும், இப்படியுமாகத் திமிறிக் கொண்டிருந்த போது பாம்பை அடைத்து எடுத்துச் செல்ல ஒரு பிளாஸ்டிக் டப்பா கொண்டு வரும்படி செல்லா கேட்டார்.

அதற்குள் ஆறுமுகம் குடும்பத்துப் பெண்களுக்கு பக்தி முற்றி விட்டது. நல்ல நீளத்துடன் இருந்த நல்ல பாம்பு அது. பாம்பை அதன் முழு விஸ்தீரணத்துடன் நேரில் கண்டதும் அந்தப் பெண்களுக்கு தாங்கள் அது நாள் வரையிலும் பார்த்து ரசித்து பக்தியில் கசிந்துருகிய நாகாத்தம்மன் திரைப்படங்கள் அத்தனையும் நினைவில் வந்திருக்க வேண்டும். அந்த பக்தி மேலீட்டில் அவர்கள் செல்லாவிடம், நல்ல பாம்புங்க இது. இது பாம்பே இல்லை. அம்மன் தான் பாம்பு ரூபத்தில் எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க! என்று கூறி பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அடைத்ததும் வீட்டுக்குள் சென்று சூடம் எடுத்துக் கொண்டு வந்து பிளாஸ்டிக் டப்பாவில் அடக்கமாகியிருந்த பாம்பின் முன்னால் கொழுத்தி ‘அம்மா, தாயே, நாகம்மா… எங்க வீட்டைத் தேடி எங்களைப் பார்க்க வந்தியே, எங்க குடும்பத்த காப்பாத்து தாயி’ என்று பக்திப் பரவசமாக தரையில் விழுந்து கும்பிட்டு பாம்பை பாட்டிலுடன் வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பிடிபட்ட பாம்பு அதன் பிறகு காப்பு வனப்பகுதியில் விடப்பட்டதாகத் தகவல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com