மழையினால் மாம்பூக்கள் பாதிப்பு... நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் சரிவு.

மழையினால் மாம்பூக்கள் பாதிப்பு... நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் சரிவு.

ழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தை விரும்பாதவர் எவருமில்லை. பல் முளைக்கும் சிறு குழந்தைகள் முதல் பல் போன முதியவர்கள் வரை மாம்பழத்தை ருசித்து மகிழ்வர். கோடை காலம் வந்து விட்டால் மோர் சாதமும் கூழும் அதற்குக் கடித்துக் கொள்ள கார மாங்காய்களும்... ஆஹா... நினைத்தாலே நாவில் நீர் ஊறுகிறது.

இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும்ஆற்றல் கொண்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராவதுடன் நரம்புத்தளர்ச்சி போன்றவைகள் நீங்கி உடல் புத்துணர்வுடன் வலுவாக மாறும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நம் இதயம் மற்றும் மூளையையும் பலப்படுத்தும். சரி இதெல்லாம் எங்களுக்கே தெரியும்? என்ன சொல்ல வரீங்க? நீங்கள் நினைப்பது கேட்கிறது. விஷயம் இதுதான். இந்த ஆண்டு மாம்பழம் வரத்து குறைவாக இருக்கும் என்கிறார்கள் மாம்பழ வியாபாரிகள். காரணம்? இதோ.

மாம்பழம் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 40 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் மட்டுமே செய்யப்படுகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி , விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுச்சாலை, குண்டு, இமாம்பசாந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பரில் மாமரங்களில் பூ பூக்கும். இவைகள்  நன்கு வளர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய்களை விளைச்சலாக எடுப்பார்கள். கடந்தாண்டு மாமரங்களில் பூப்பூக்கும் நேரத்தில் எதிர்பாராமல் மழை கொட்டியதால் சேதமான மாம்பூக்கள் கீழே கொட்டின. பூக்கள் இன்றி நடப்பாண்டு மாமரங்களில் மாங்காய் விளைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் மாங்காய் விளைச்சல் அதிகளவில் உள்ளதாகவும் அவைகளே மார்க்கெட்டுக்கு முதலில் வர வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள் வியாபாரிகள்.

இது குறித்து சேலத்தைச் சேர்ந்த மாங்காய் வியாபாரிகள் கூறியதாவது: “கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 30,000த்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மாவிளச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், அயோத்தியாப்பட்டினம், வலைசையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் சீசன் நேரத்தில் 60 ஆயிரம் முதல்  75 ஆயிரம் டன் வரை மாங்காய்கள் கிடைக்கிறது. மாங்காய் விளைச்சலை பொருத்தமட்டில் டிசம்பர் மாதத்தில் பூ பூக்கும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் மழை பெய்தால் பூப்பூப்பது குறையும். நடப்பாண்டு நவம்பர் தொடர்ந்து டிசம்பரிலும் மழை கொட்டியதால் மாமரங்களில் பிடித்த பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாகவே நடப்பாண்டில் மாங்காய் விளைச்சலில்  சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விற்பனைக்கு வரும் ஆனால் இந்த ஆண்டு  ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் தான் சீசன் களைகட்டும். தற்போது விற்பனைக்கு கிளிமூக்கு மாங்காய் வந்துள்ளது.

முதல் சீசனாக சேலம் பெங்களூரா மாம்பழம் விற்பனைக்கு வரும். இதனைத் தொடர்ந்து பங்கனபள்ளி, மல்கோவா, செந்தூரா,குண்டு, நடுச்சாலை போன்ற பல்வேறு மாம்பழ ரகங்கள் விற்பனைக்கு வரும். தமிழகத்தில் மாவிளச்சல் சற்று பாதித்து இருந்தாலும் கர்நாடகா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவிளச்சல் அமோகமாக உள்ளதால் நடப்பாண்டு அங்கிருந்து தமிழகத்திற்கு மாங்காய்கள் அதிகளவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. சேலம் மார்க்கெட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்கு விற்பனைக்கு வரும் மாங்காய்களை சில்லறை வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தைப் பொறுத்து  120 முதல் 200 ரூபாய் வரை விற்பனைக்கு வரும்”

மேலும், சேலம் மாம்பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு சேலம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரியில் இருந்து சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 டன் மாம்பழம் வரும். இவ்வாறு விற்பனைக்கு வரும் மாம்பழம் 75%  உள்ளூர் விற்பனைக்கு பயன்படுத்தப் படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் துபாய், மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற  பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தவிர இந்தியாவிலேயே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சேலம் மாம்பழங்களின் ருசி அதிகம் என்பதால்  சீசன் தொடங்குவதற்கு முன்பே வெளிமாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். ஆகவேதான் சேலம் மாம்பழத்திற்கு இப்போதே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அல்வா போன்ற தித்திக்கும் சேலத்து மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா? சீசன் துவங்கியாயிற்று. கிடைக்கும் போதே வாங்கி விடுங்கள். இல்லையெனில் கிடைக்காமல் ஏமாந்து போவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com