சென்னையில் குறையும் நிலத்தடி நீர் மட்டம்... வரப்போகும் கோடையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?
சென்னை மாநகரத்தில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமாக இருந்தாலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நிலத்தடி நீர் மட்டம் நடப்பாண்டில் சராசரியாக 3.98 மீட்டர் என்று அளவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட குறைவு. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு நடப்பாண்டின் ஜனவரி மாதம் நிலத்தடி நீர் மட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால் ஏறக்குறைய 68 செ.மீ குறைந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
தற்போதைய வறண்ட வானிலையும், குறைவான மழைப்பொழிவும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டத்தை தொடர்ந்து குறைத்து வருகின்றன. சமீபத்திய வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சென்னையில் வழக்கத்தை விட குறைவான மழையே பெய்திருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டில் வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகமான மழை பெய்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் 2021 சிறப்பான ஆண்டாக இருந்திருக்கிறது. வழக்கத்தை விட அதிகமான மழை பெய்ததால் கிடைத்த தண்ணீரால் மட்டுமே 15 மாதங்களுக்கும் மேலாக சமாளித்து வந்திருக்கிறோம். தினசரி ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை வாசிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் வரும் கோடையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சென்னை மாநகரத்தில் நீர்மட்டம் குறைந்துவந்தாலும், அனைத்து இடங்களிலும் இதே நிலை நீடிக்கவில்லை. திரு.வி.க நகர், ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. ஆனால், வளசரவாக்கம், பெருங்குடி உள்ளிட்ட தென்சென்னையின் பல இடங்களில் நிலத்தடி நீர் திடீரென்று குறைந்து வருகிறது.
சென்னையில் கோடைக்காலம், எப்போதும் கடுமையானதாகவே இருந்திருக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறையும் நேரத்தில் வெப்பமும் அதிகரித்ததால் வரப்போகும் கோடையை சமாளிப்பது பெரும் கஷ்டமாகிவிடும் என்கிறார்கள், நிபுணர்கள். இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. வீராணம் திட்டம், சென்னையின் தாகத்தை தீர்த்தது. வரப்போகும் கோடைக்கு என்ன செய்யப் போகிறோம்?