கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர். ஆன்மிக ஆச்சர்யம்!

கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர். ஆன்மிக ஆச்சர்யம்!

வாயால் வடை சுட்டவர்களை பார்த்து அடேங்கப்பா எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று நாம் வாய் பிளந்து வியந்துள்ளோம். ஆனால் வெறும் கையை கொதிக்கும் எண்ணெய்க்குள் விட்டு வடைகளை சுட்டவரைப் பார்த்ததுண்டா?

இதோ சேலத்தில் நிகழ்ந்த ஆன்மிக ஆச்சர்யம் இங்கே.

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு எடுத்தார். இதை காண ஆயிரக்கணக்கானோர் கோயிலில் திரண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அரியாகவுண்டம்பட்டி காளியம்மன் நகரில் வீரமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சக்திமிக்க அம்மனுக்கு ஆண்டுதோறும்  தை மாதத்தில் விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன் திருவிழா துவங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

      இந்த விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில்  60 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் விறகுகள் உபயத்தில் சலசலவென  கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வடைகளைத் தட்டிப் போட்டார். பின்னர் அந்த வடைகளை வெந்த பின் தன் இரண்டு கைகளால் எண்ணெயிலிருந்து அதை அப்படியே வெளியே எடுத்தார். இதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் திரண்டனர். கோவில் திருவிழாவில் நடந்த இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

      ஒரு மனிதனின் நம்பிக்கைக்குத் தகுந்த மனவலிமை ஏற்படுகிறது என்பதை அறிவோம். ஆன்மிகத்தில் அலகு குத்துதல், காவடி சுமத்தல், தீ மிதித்தல், ஆணி காலணியில் நடத்தல், பால் குடம் எடுத்தல், மண்சோறு சாப்பிடுவது, என எத்தனையோ வேண்டுதல் பரிகாரங்களைப் பார்த்ததுண்டு. நம் தோலின் மென்மைக்கு கொதிக்கும்  நீரோ, எண்ணெயோ சிறுதுளி பட்டாலே அலற வைக்கும். ஆனால் கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டும் எந்த பாதிப்புமின்றி இருப்பது மாபெரும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாத்தியம். கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை இது போன்ற வலிமையத் தந்து எதையும் தாங்கும் என்பதற்கு இந்த பக்தரின் செயலே சாட்சி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com