தருமபுரி பட்டாசு குடோனில் தீ விபத்து: பெண்கள் உயிரிழப்பு!

தருமபுரி பட்டாசு குடோனில் தீ விபத்து: பெண்கள் உயிரிழப்பு!

ருமபுரி மாவட்டம், நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவர் பட்டாசு குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். அந்தப் பட்டாசு குடோனில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (70), முனியம்மாள் (50) மற்றும் சிவசக்தி ஆகிய மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வைக்கப்படிருந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. அதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பட்டாசு குடோன் வெடித்துச் சிதறியது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தால் அக்கம் பக்கத்து வீடுகள் நிலநடுக்கம் ஏற்பட்டது போல குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த பயங்கர வெடிச் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, பட்டாசு குடோன் வெடித்து சிதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெடி விபத்தில் முனியம்மாள் மற்றும் பழனியம்மாள் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்கள் தவிர, சிவசக்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்த வெடி விபத்து குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது அவரிடம், ‘தீயணைப்பு துறையினர் வருவதற்கு கூட வசதி இல்லாத இந்த இடத்தில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது ஏன்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாவட்ட ஆட்சியர், ‘இது புதிதாக அனுமதி வழங்கி நடத்தப்படும் பட்டாசு ஆலை அல்ல. ஏற்கெனவே அவர்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பட்டாசு ஆலை செயல்பட வருகிற 2024ம் ஆண்டு வரை லைசன்ஸ் உள்ளது. இந்த வெடி விபத்துக்கான காரணத்தை ஆராய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அவர் தெரிவித்தார்.

பட்டாசு வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்துக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். மேலும் படுகாயம் அடைந்த சிவசக்திக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com