’எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க’ சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை பகுதியில் நேற்று ஆற்று பாலம் மற்றும் அரசு பள்ளியின் புதிய சுற்றுச்சுவர் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில், “மாணவ, மாணவியர்களே, நன்றாகப் படியுங்கள். பெண் கல்வி மேம்பாட்டுக்காக, உலகத்திலேயே மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான். மாணவர்களாகிய உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிய வேண்டும். நாங்கள் படிக்கும்போது ஆங்கிலம் சரியாக தெரியாததால்தான் இந்த வம்பெல்லாம். நீங்கள் அதையெல்லாம் படிக்கிறீர்கள். வாழ்த்துகள்" என்றார்.
அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்று காட்டமாகக் கேட்டார்.
ஏற்கெனவே அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பயணம்’ என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும், கிராம சபை கூட்டம் ஒன்றில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும், பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையின்போது தடித்த வார்த்தைகளால் அவர் பேசியது என அடுத்தடுத்து அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் வேளையில், நேற்றைய தினம் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப் பிரச்னை குறித்து மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பொறுப்பற்ற பதில், அங்கு கூடியிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைப் பார்த்து அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.