எடப்பாடி தலைமையில்   51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெற்றது

எடப்பாடி தலைமையில் 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெற்றது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அதிமுகவின் 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும் 51 ஏழை எளிய ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் அம்மா பேரவை செயலாளர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் 51 ஜோடிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயாகுமாரின் மகளும் ஒருவர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே T. குன்னத்தூர் அம்மா கோவில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திருமண மேடை அமைக்கப்பட்ட விழாவிற்கு சேலத்திலிருந்து சாலைமார்க்கமாக வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி T. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலுக்கு 10. 30 மணி அளவில் வருகை தந்தார். அதன்பின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவித்தவுடன் 51 ஜோடிகளுக்கு தனது கரங்களால் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசிய போது,

இன்று அதிமுகவின் 51 வது பொன்விழாவை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சமத்துவ சமுதாய திருமணவிழா நடைபெறுகிறது. இன்று தீர்ப்பு வருவதை முன்னிட்டு நான் நேற்று கலங்கி போயிருந்தேன். தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதை எண்ணி இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன்.

என்ன ஆச்சரியம் பாருங்கள், இன்றைக்கு அம்மா கோவிலில் வந்து வேண்டிய சில நிமிடங்களிலேயே நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கியிருக்கிறது.

அதிமுகவை அடக்க நினைத்த எட்டப்பர்கள் திமுகவிற்கு B டீமாக இருந்தவர்கள் முகத்திரை தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிழிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் அதிமுக இயக்கம் தொண்டர்களின் தலைமையின் கீழ் இயங்கும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் இயக்கம், ஒரு குடும்பத்திற்காக உழைக்கும் இயக்கமல்ல! ஊடகங்கள் அதிமுகவிற்கு துணை நிற்க வேண்டும். 

ஒன்றரை  கோடி அதிமுக தொண்டர்களின் உயிருக்கு இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் அதிமுக தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, ஆடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுத்து வாக்கு சேகரிக்கீரர்கள்.

வாக்காளர்கள் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதால்தான் இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். வாக்காளர்கள் தான் நீதிபதிகள். நாங்கள் அவர்களை நம்புகிறோம். எங்களுக்குத்தான் அவர்கள் வாக்களிப்பார்கள்.

அதே போல் மொய்-டெக் என்ற பெயரில் 102 கணினி மற்றும் பணம் என்னும் இயந்திரத்துடன் மொய் எழுதும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள்., தொண்டர்கள்., நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று இந்த திருமண விழா நடைபெற்றது.

51 ஜோடிகளுக்கும் கல்யாண சீர்வரிசையாக 1லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ, பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குகின்றனர். 

இந்த திருமண நிகழ்வில் குறைந்தபட்சம் 50,000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், உணவு அருந்துவதற்கு 6 இடங்களில் அமைக்கப்பட்டு தொடர்ந்து காலை 7.00 மணி முதல் பந்தி பரிமாறப்பட்டு வந்தன.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாவட்ட செயலாளர்கள், அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com