கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள மறுத்தப் பெரியவர் - பர்கூர் மலை கிராமத்தில் பரபரப்பு!
அந்தக்காலத்தில் பத்துப்பிள்ளைகளுக்கு மேல் பெற்று அவர்களை கண்ணுங்கருத்துமாக வளர்த்த பெற்றோர் அதிகம் இருந்தனர். காலம் மாற மாற பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சி போன்றவைகளை கருத்தில் கொண்டு நாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை அரசாங்கமே கொண்டு வந்தது . இதனால் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்குள் வந்ததுடன் வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் பெற்றால் மட்டுமேவளமாகவாழ முடியும் என்பதையும் மக்கள் உணர்ந்தனர். காலப்போக்கில் இரண்டும் ஒன்றாகி ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலையில் இருக்கும் இன்றைய தலைமுறை இடையே குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இன்றி 13 குழந்தைகளைப் பெற்ற பெற்றோரைப் பற்றிய செய்திதான் இது.
பர்கூர் மலை கிராமத்தில் 13 குழந்தைகளின் தந்தைக்கு மருத்துவ குழுவினர் போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு விவசாய கூலித் தொழிலாளிக்கு நான்கு ஆண் குழந்தைகள் எட்டு பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13 ஆவது குழந்தையாக சுகப்பிரசவத்தில் 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது.
முதல் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் தந்தையையும் தாயையும் மருத்துவக்குழுவினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் தொழிலாளியின் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. இது பற்றி அறிந்ததும் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் பல முறை அங்கு சென்று கணவன் மனைவி இரண்டு பேரையும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் பயந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து விட்டனர். இந்நிலையில் இறுதி முயற்சியாக நேற்று முன்தினம் அந்தியூர் வட்டார மருத்துவ குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர் உதவியுடன் அவருடைய வீட்டுக்கு சென்றனர். இதற்கு இடையில் 13 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு ரத்தசோகை இருந்ததால் அவருக்கு குடும்பக் கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதை டாக்டர்கள் அறிந்து கொண்டனர். இதனால் குழந்தைகளின் தந்தையை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அவர் வழக்கம் போல் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரிடம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் 15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்துவிடும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து வழக்கம் போல் உங்கள் வேலையை பார்க்கலாம். உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்து கொடுக்கிறோம் என்றும் கூற. உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ஒரு வழியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வரவழைக்கப் பட்ட மருத்துவக் குழுவினர் தொழிலாளிக்கு நவீன முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.
விடாமல் தொடர்ந்து ஒரு வழியாக அந்த மலைக் கிராமத்தை சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை அப்பகுதியினர் பாராட்டினர்.