உயர்கல்வி மாணவர்களின் இடைநிற்றலை கண்காணிக்கும் EMIS டிராக்!

உயர்கல்வி மாணவர்களின் இடைநிற்றலை கண்காணிக்கும் EMIS டிராக்!

எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு வேறு எந்த உயர்கல்வியில் சேர்ந்தாலும் EMIS ஐடி எண்ணை பயன்படுத்தியே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இடைநிற்றல்களை தவிர்ப்பதற்காகவும் உயர் கல்வியை முடிக்கும்வரை மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS ID) வழங்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் EMIS ID மூலமாகவே பெறப்படுகின்றன. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே EMIS ID-ஐ பராமரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.

முதன்முறையாக பள்ளியில் சேர்க்கப்படும்போது மாணவர்களுக்கு ஒரு EMIS ID உருவாக்கப்படும். ஒரு பள்ளியிலிருந்து விலகி இன்னொரு பள்ளியில் சேரும்போது ஏற்கெனவே EMIS ID உள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டியிருக்கும்.

பள்ளியில் சேரும்போது மாணவர் பெயர், பெற்றோர் விவரம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றுடன் மாணவரின் EMIS ID ஐ குறிப்பிட்டு சேர்க்கைச் சான்றிதழ் (Admission Certificate) சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த ஊழியர்கள் EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றோர்களுக்கு வழங்கவேண்டும்.

மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். OTP பயன்படுத்தி மட்டுமே ஐடியில் மாற்றங்கள் மேற்கொள்ள முடியும்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை இணைத்தல் வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து புதிய EMIS IDஐ உருவாக்கிக் கொள்ளலாம்

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ்-1 வகுப்புக்கும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் செல்ல வாய்ப்புண்டு. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் எமிஸ் வழங்கும் எண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் இடை நிற்றல் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை பத்தாவது வகுப்பிற்கு பின்னர் எமிஸ் ஐடி எங்கேயும் பயன்படுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட மாணவர் உயர்கல்விக்கு செல்லவில்லை என்று முடிவு செய்துவிடலாம். சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, உயர்கல்வியை தொடர முடியாமைக்கான காரணத்தை கேட்டு அதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும்.

பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்பான எமிஸ் ஐடி, நடப்பாண்டு முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com