இரட்டை ஆட்சி நடக்கிறது

  இரட்டை ஆட்சி நடக்கிறது

 
புதுச்சேரி :  தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளைக் கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வை நடத்துவதை நேரில் பார்த்து உறுதி செய்ய விரும்புகிறேன். என் சவாலை ஏற்று ஆளுநர் தமிழிசை தேதியை தெரிவிப்பாரா? என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல, அரசியல் செய்ய விரும்பினால் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யலாம் என புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும், அதை பொதுவெளியில் பேசுவது அழகல்ல. முக்கியமாக தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை சௌந்தரராஜன் பேசுவது அழகல்ல. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் செய்ய விரும்பினால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்.

 மீறிவிட்டார்

  "புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில், அரசு பதவியில் இல்லாத பா.ஜ..க தலைவர் சாமிநாதனும் பங்கேற்று இருக்கிறார். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவரை பங்கேற்க அனுமதிக்க யார் அதிகாரம் அளித்தது என கேள்வி எழுகிறது. இதன் மூலமாக எல்.முருகன் பதவி ஏற்கும்போது உறுதியேற்ற ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.

அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர் பங்கேற்றதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகிய மூவர்தான் பொறுப்பு. ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதற்காக மத்திய அமைச்சர் முருகன் பதவி விலகவேண்டும். தலைமைச் செயலர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடக்கிறது.  பா.ஜ.க.வுக்கு முதல்வர் ரங்கசாமி அடிமையாகிவிட்டார். புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான ஆலைகள் தொடங்குவதற்கு ரூ.90 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்வர் ரங்கசாமி பதில் சொல்வாரா?" என காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com