ஈரோடு இடைத்தேர்தல், அதிமுக ரகசிய கூட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு இடைத்தேர்தல், அதிமுக ரகசிய கூட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தி.மு.க.கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:

திமுக கூட்டணி கட்சிகள் எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று உறுதியளித்துள்ளனர். கூட்டணி கட்சிகள் திமுகவின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியடையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அதிமுக ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்துள்ளது. அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியாது. காரணம் உட்கட்சி பூசல். இவர்கள் கூட்டம் போட்டால் அவர்களுக்கு தெரியக்கூடாது. அவர்கள் கூட்டம் போட்டால் இவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். யார் எங்கு கூட்டம் போட்டாலும் விஷயம் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.

எங்களுக்கு யார், எங்கு கூட்டம் போட்டாலும், என்ன திட்டம் தீட்டினாலும், எந்த வழியில் வந்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. திமுக கூட்டணி தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டது. நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு கே.என்.நேரு நிருபர்களிடம் கூறினார்.

மற்றொரு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-   

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக தி.மு.க பாடுபடும். தி.மு.க. கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு தி.மு.க. தலைவர் ஒருபோதும் தயங்கியது கிடையாது. இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி என்று பாராட்டப்பட்டுள்ள ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். நெல்லை மாநகர தி.மு.க அலுவலகம் டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நெல்லை மாநகர தி.மு.க செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மாநகர தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com