தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை.. போராடி மீட்ட வனத்துறை!

தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை.. போராடி மீட்ட வனத்துறை!
Anupriyam K

ரோட்டில் தண்ணீரில்லா கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. ஆக்ரோஷமாக இருந்த சிறுத்தையை வனத்துறையினர் யூகம் அமைத்து கூண்டு வைத்து மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் உள்ளன. அங்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வியாழன் இரவு சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குய்யனூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. மறுநாள் காலை உருமல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் எட்டிப் பார்த்த போது சிறுத்தை கிணற்றிற்குள் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருந்தது. இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி அங்கு விரைந்த வனத்துறையினர் ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தையை எவ்வாறு பிடிப்பது என ஆலோசனை மேற்கொண்டனர். சிறுத்தையின் உடல்நலன் பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் கூண்டில் இறை வைத்து பிடிக்கும் பணியை செயல்படுத்தினர். இதற்காக கிரேன், கூண்டு கொண்டு வரப்பட்டன. நேரம் ஆகஆக சிறுத்தை சோர்வடைந்தது. இதனிடையே தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிறுத்தை மீட்பு பணியை காண குவிந்ததால் பரபரப்பானது.

தொடர்ந்து கூண்டில் கோழி வைத்து கிரேன் உதவியுடன் கிணற்றிற்குள் இறக்கப்பட்டது. தன்னை நோக்கி ஆபத்து வருவதாக உணர்ந்த சிறுத்தை மீண்டும் ஆக்ரோஷமாகி மீண்டும் அங்கும் இங்கும் ஓடியது. கோழியை பிடிக்க சிறுத்தை கூண்டிற்குள் நுழைந்ததும் அடைப்படும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் சிறுத்தை கோழியை கண்டுக்கொள்ளாததால் ஆப்ரேஷன் கோழியை எடுத்துவிட்டு ஆப்ரேஷன் ஆட்டை களமிறக்கினர். ஆமாம் கூண்டில் ஆடு வைக்கப்பட்டு கிணற்றிற்குள் இறக்கப்பட்டது.

ஆக்ரோஷத்திலும் கடும் பசியிலும் இருந்த சிறுத்தை ஆட்டை பிடிக்க கூண்டிற்குள் நுழைந்தும் கதவு அடைக்கப்பட்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து கூண்டு வெளியே எடுக்க சுற்றியிருந்த கூட்டத்தை கண்டு சிறுத்தை பலமாக உருமியது. பின்னர் கூண்டு வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அடர்ந்த வனப்பகுதியை நோக்கி நகர்ந்தது. பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தெங்குமரகடா அடர்ந்த வனத்தில் கூண்டு திறக்கப்பட சிறுத்தை பாய்ந்தோடியது. சுமார் 10 மணி நேரம் நடந்த சிறுத்தை மீட்பு பணியால் குய்யனூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com