ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ரெடி த.மா.க ரெடியா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ரெடி த.மா.க ரெடியா?

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெரியாரின் கொள்ளுப் பேரன், திருமகன் ஈவேரா மறைந்ததை தொடர்ந்து, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து அடுத்த மாதம் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இடைத்தேர்தலில் தி.மு.கவே நேரடியாக போட்டியிடும் என்று செய்திகள் வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க மேலிடத்தை தொடர்பு கொண்டார்கள். கடந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது இடைத் தேர்தலிலும் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ் கட்சியினர், வேட்பாளரை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். மறைந்த தன்னுடைய மகன் தொகுதியில் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின்றன. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று வந்திருக்கின்றன. 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார்.

தி.மு.கவுடன் கூட்டணி வைக்காத அதிருப்தியில் தே.மு.தி.கவை உடைத்து, அங்கிருந்து வெளியேறி தி.மு.கவில் இணைந்து போட்டியிட்ட அதே சந்திரகுமார், 2016 தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போது தொகுதி, அ.தி.முக வசம் சென்றது.

2021 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா, பெரியார் கொள்ளுப் பேரனிடம் தோற்றுப்போனார். இம்முறை திரும்பவும் த.மா.கவுக்கு இடம் கிடைக்குமா? யுவராஜாவுக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைக்குமா? பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com