ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கேப்டன் கட்சியின் சந்திர குமாரை நினைவிருக்கிறதா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கேப்டன் கட்சியின் சந்திர குமாரை நினைவிருக்கிறதா?

ஒரு சின்ன பிளாஷ் பேக். 2016 தேர்தல் அறிவிப்பு வந்த நிலையில் தி.மு.க தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருந்தன. தி.மு.க தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர் பாஜகவுடனும், தேமுதிகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை எப்படியாவது தன்னுடைய பக்கம் கொண்டு வந்துவிட பகீரதப் பிரயத்தனத்தை தி.மு.க மேற்கொண்டது. தேமுதிகவோ திமுக கூட்டணியில் சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்கிற குழப்பத்தில் இருந்தது.

முதல் கட்டமாக ஸ்டாலின் நேரில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்கைளை ஆரம்பித்தார். அதே நாள் மாலை கோபாலபுரத்திற்கு விஜயகாந்த் வருவார் என்றும், கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார் என்றும் பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதியும் காத்திருந்தார். ஆனால், விஜயகாந்த் வரவேயில்லை. திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று மக்கள் நலக் கூட்டணி பக்கம் சாய்ந்தார். மக்கள் நலக்கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.

2011 தேர்தலில் அ.தி.முகவுடன் கூட்டணி சேர்ந்து கணிசமான இடங்களைப் பெற்ற விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2016 தேர்தலில் தி.மு.கவோடு கூட்டணி சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் ஐக்கியமாகியிருந்தார்.

இந்நிலையில்தான் தே.மு.தி.கவை உடைத்துக்கொண்டு 3 எம்.எல்ஏக்களுடன் வெளியேறினார், சந்திரகுமார். 2011 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேமுதிகவின் முக்கியமான முகமாக உலா வந்தவர். விஜயகாந்த் தி.மு.கவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்றதும், ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகி, அறிவாலயத்திற்கு வந்துவிட்டார்.

தேமுதிகவிலிருந்து வெளியேறிய 3 எம்.எல்.ஏக்களுடன் இணைந்து, மக்கள் தே.மு.தி.க என்னும் பெயரில் தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார்.

மக்கள் தே.மு.தி.கவாக இருந்தாலும், தி.மு.கவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

சந்திரகுமார், இளைஞர். செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் முதலியார் சமூகத்தினர் இருப்பதால் சந்திரகுமாருக்கு பரவலான செல்வாக்கு உண்டு.

2011ல் இதே தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.கவின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அதிமுக பிரமுகருமான முத்துசாமியை தோற்கடித்திருந்தார். இந்நிலையில் 2016ல் அதே முத்துசாமியின் ஆதரவோடு அ.தி.மு.கவை எதிர்த்து போட்டியிட்டார்.

இன்று இடைத்தேர்தலை சந்திக்கும் தென்னரசுவை எதிர்த்து, தி.மு.க கூட்டணி சார்பாக சந்திரகுமார் போட்டியிட்டார். தென்னரசுவுக்கு அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளோடு, முதலியார் சமூகத்தினரும் வாக்களித்த காரணத்தால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.

இன்று சந்திரகுமார், தி.முகவின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் இளங்கோவனுக்காக இணையத்திலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தி.மு.க, அதி.மு.க, தே.மு.தி.க என அனைத்து கட்சிகளிலும் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கிறது.

ஒருவேளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே நேரடியாக போட்டியிடுவதாக இருந்தால், சந்திரகுமார்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பார் என்கிறார்கள். அடுத்த ரவுண்டில் பார்க்கலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com