ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில்முருகன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : ஓபிஎஸ் அணியின் வேட்பாளர்  செந்தில்முருகன் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எடப்பாடி அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுக தேர்தல் பணிக்குழுவை அமைத்தது .

நேற்று காலை எடப்பாடி அணியின் சார்பில் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். அத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான்தான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் சுட்டிக்காட்டினார். இதனால், அதிமுகவில் மீண்டும் சின்னம் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பழனிசாமி தரப்பில் காலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், பன்னீர் தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது. பழனிசாமி, பன்னீர் வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

அ.தி.மு.க., வேட்பாளராக செந்தில்முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தீவிர விசுவாசி; ஜெயலலிதா மீது பற்றுக் கொண்டவர். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பா.ஜ.க, வேட்பாளரை நிறுத்துவதாக தகவல் கிடைத்தால், எங்கள் வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வோம்.

பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. எங்கள் வாதத்தை எடுத்து வைப்போம். இரட்டை இலை யாருக்கு என்பது, தேர்தல் கமிஷன் முடிவில் உள்ளது.

தேர்தல் கமிஷனிடம், உரிய ஆவணங்களை அளித்துள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், எங்கள் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி.

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, பா.ஜ.க, தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைக்க, எந்த காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன். அவர்கள் பொது வேட்பாளரை நிறுத்தி இருப்பதாகக் கூறி, வேட்புமனுவில் கையெழுத்து கேட்டால், கையெழுத்து போட தயாராக உள்ளேன்.

கட்சியில் ஒற்றுமை இல்லாமல் போவதற்கு, நான் காரணமல்ல. யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். மத்திய அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறேன். தேர்தல் பணிக் குழுவில் இன்னும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம்.

பிரிந்து போட்டியிடுவது, தி.மு.க.,வுக்கு சாதகம் என்பது எனக்கு புரிகிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும். சசிகலாவிடம் உறுதியாக ஆதரவு கேட்போம். பிரிந்துள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம்.

கருணாநிதி நினைவு சின்னம் பேனா வைப்பது தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும். பொது மக்கள் கருத்துதான் எங்கள் கருத்து. இதனால் பயன் உள்ளதா, இல்லையா என்பதை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவில் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ் அணிகளில் யாராவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் அல்லது இருவரையும் ஒதுக்கிட விட்டு தனியாக ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக மாநிலத்தலைமை தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com