பரபரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி, சூடாகும் தேர்தல் களம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையுமா?

பரபரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி, சூடாகும் தேர்தல் களம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் பெரியாரின் கொள்ளுப் பேரனுமான திருமகன் ஈவெரா திடீர் மறைவால், இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. கடந்த வாரம், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி வரும் மே மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபைச் செயலாளர், தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்திடமிருந்து இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆனால், இடைத்தேர்தல் எப்போதும் சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. திருமங்கலம் பார்முலாவுக்கு முன்னர் இடைத் தேர்தலை எதிர்கொள்வதில் ஆளுங்கட்சிகள் தடுமாறியிருக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மோதிக்கொண்டன. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பதற்காக இம்முறை பிரதான கட்சிகள் அலட்சியமாக இருந்துவிடப்போவதில்லை. இடைத் தேர்தல் என்பதால் முக்கியமான பலப்பரீட்சை.

தி.மு.க, அதி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான காட்சிகள் தங்களது அடையாளத்தை, தனித்தன்மையை வெளிப்படுத்தும் தேர்தலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையப்போகிறது. யார், யாரோடு கூட்டணி சேருவார்கள்? 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையுமா? ஏகப்பட்ட கேள்விகள் எழக்கூடும்.

ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதை நிரூபிக்கும் வகையில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க நினைக்கலாம். தி.மு.க போட்டியிடுவதால் அதை எதிர்த்து அ.தி.மு.க போட்டியிடலாம். பா.ஜ.கவும் போட்டியிட நினைக்கலாம். கொங்கு மண்டலம் என்பதால் தி.மு.கவுக்கு கடுமையான போட்டியாகவும் இருக்கும்.

யார் போட்டியிடப்போகிறார்கள்? அதுதான் முதல் கேள்வி. கேள்விக்கு விடை தெரிந்தால் மட்டுமே வெற்றி, தோல்விக்கான சாத்தியங்களை அலச முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com