மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவிக்கு உதவித்தொகையுடன் அட்மிஷன் வழங்கிய எத்திராஜ் கல்லூரி!

மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவிக்கு உதவித்தொகையுடன் அட்மிஷன் வழங்கிய  எத்திராஜ் கல்லூரி!
Published on

சென்னை, பெரம்பூர் MH ரோட் கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி N காயத்ரி, சமீபத்தில் வெளிவந்த தேர்வு முடிவுகளின் படி 592/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேறி இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்ட சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு தங்களது கல்லூரியில் முழு கல்வி உதவித்தொகையுடன் அட்மிஷன் வழங்குவதாக அறிவித்திருந்தது.

இதோ, இன்று புதன்கிழமை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை தொடங்கிய நிலையில், கல்லூரியின் சேர்மன் மாணவி காயத்ரியின் தந்தை நீலகண்டனை அழைத்து தங்களது கல்லூரி, மாணவி காயத்ரிக்கு முழு கல்வி உதவித்தொகையுடன் அட்மிஷன் வழங்கி இருப்பதாகக் கூறியதும் மாணவி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றியது.

இன்று, கல்லூரி நிர்வாகமானது தனது சேர்க்கை செயல்முறையைத் தொடங்கும் போது சேர்க்கை கடிதத்தைப் பெறும் முதல் மாணவிகளில் ஒருவராக காயத்ரி இருப்பார்.

தனக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பு குறித்துப் பேசும்போது மாணவி காயத்ரி;

"இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எப்போதும் அதற்குரிய நன்றியுடன் இருப்பேன், கல்லூரியில் நன்றாகப் படிப்பதன் மூலம் நான் அதற்கு தகுதியானவளாக மாறுவேன் என்று நம்புகிறேன். இந்தப் படிப்புக்குப் பிறகு சி.ஏ. படிப்பைத் தொடர்வேன்,'' என்றார். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கை, ஒருநாள் மிகப்பெரிய சமையல் கலைஞராக (Chef) வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். இந்தியாவின் பெருமை மிகு முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் சொல்வதற்கிணங்க அந்த மாணவியின் கனவும் தனது சகோதரியினது போலவே எதிர்காலத்தில் ஒரு நற்தருணத்தில் ஈடேறலாம். ஏனெனில் முயற்சியே வெற்றிக்கு முதல்படி இல்லையா?!

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் மைக் முரளிதரன்,மாணவி காயத்ரிக்கு அளித்த வய்ப்பு குறித்துப் பேசும்போது, “ இதன் மூலமாக நாங்கள் அசாதாராணமான எதையும் செய்து விடவில்லை. இந்தக் கல்லூரி நிறுவனர்களின் சிந்தனைப் போக்கைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். ஊடகங்களில் மாணவி காயத்ரிகுறித்த செய்திக் கட்டுரையைப் படித்தபோது,

உடனடியாக அவருக்கு உதவ முடிவு செய்து, அட்மிஷன் வழங்கினேன். இன்று அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறேன், மேலும் இதுபோன்ற பல மாணவர்களுக்கு எங்களது கல்லூரி சார்பில் உதவ முடியும் என்று நான் நம்புகிறேன், ”என்று கூறினார்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பில்லிங் ஊழியராக பணிபுரியும் மாணவி காயத்ரியின் தாயார் லட்சுமி கூறுகையில், “என் மகள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்கும் போது, அவர் தனியார் பள்ளியில் படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும் எனறு நான் நம்பவில்லை. அது அவசியமில்லை என்று எனக்குத் தெரியும். இப்போது அவளுக்கு இந்த சலுகை கிடைத்தவுடன், நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இவரது உழைப்பை அங்கீகரித்து எங்களுக்கு உதவிய பெருமை கல்லூரி சேர்மனையே சாரும். பெரம்பூரில் உள்ள எம் எச் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தன் மகள் இந்த மதிப்பெண்ணைப் பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள் , அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள தாங்கள் கடமைப்ட்டிருக்கிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

மாணவியின் தந்தை என் நீலகண்டன், அவரது மகள் 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவரை கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க குடும்பத்தில் நிதி வசதி போதாதே! என்ன செய்யப் போகிறோமோ என்று அச்சத்தில் இருந்தார். இதோ இன்ரு அவரது அச்சம் வெயில் பட்ட பனி போலக் கரைந்து விட்டதென்னவோ உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com