அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, பணத்தை திருப்பிக்கொடுத்த மாஜி அ.தி.மு.க நிர்வாகி!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, பணத்தை திருப்பிக்கொடுத்த மாஜி அ.தி.மு.க நிர்வாகி!
Published on

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவரும் தற்போது சசிகலா ஆதரவாளராக இருந்து வருபவரான மாஜி அதிமுக புள்ளி ஒரு மோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப். அ.தி.மு.கவின் அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்டை எதிர்பார்த்திருக்கிறார். சீட் கிடைக்காததால் மாவட்டத் தலைமைக்கு எதிராக கிளம்பினார். பின்னர் சசிகலாவை சந்தித்து, அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

உள்கட்சி மோதல் வலுத்த காரணத்தால், தனது ஆதரவாளர்களோடு சசிகலா பக்கம் வந்தார். சென்ற ஆண்டு இவருடைய மகள் திருமணம் நடைபெற்றபோது, சசிகலா திண்டிவனத்திற்கு வந்திருந்தார். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்ட அதிமுக கொடியால் சர்சசை ஏற்பட்டது. சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இருதரப்பும் மோதிக்கொண்டது.

தற்போது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் முகமது ஷெரீப், ஒரு மோசடி புகாரில் சிக்கியிருக்கிறார். டி.கீரனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாஃபர் என்பவரோடு சேர்ந்து, விழுப்புரம் - சாலமேடு பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவரின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16,00,000 பழனிவேலிடமிருந்து பெற்றுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பணத்தை திருப்பித்தராமல் இருவரும் ஏமாற்றிவிட்டதாக பழனிவேலு போலீஸிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷெரிப்பை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது, குற்றத்தை ஒப்புக் கொண்டு உரிய பணத்தை திருப்பி அளித்தார். இதையெடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளில் முகமது ஷெரிப்பும் ஒருவர். ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததுண்டு. லெட்டர் பேட் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கூட மக்கள் பணம் கொடுத்த ஏமாந்த சம்பவங்கள் உண்டு. ஆனால், எந்தக்கட்சியும் சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது ஏனோ நடவடிக்கை எடுப்பதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com