‘நாகரீகக் கோமாளி ஓ.பன்னீர்செல்வம்’ போஸ்டரால் சர்ச்சை: அதிமுகவில் பரபரப்பு!
அதிமுக தலைமை மோதலில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தும் இடையே இருந்த வந்த பிரச்னையில் நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளால் எடப்பாடியின் கையே ஓங்கி இருக்கிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாகிப் போயினர். அதைத் தொடர்ந்து சட்டப்போராட்டம் மூலம் ஓபிஎஸ் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரில், 'கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம். ஒன்றரை கோடி கழக தொண்டர்கள், 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வத்தை கழக அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியை நீக்கியும் கழகமும் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரட்டை இலை சின்னத்தைப் பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை பைத்தியமே!' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த சில காலமாக அதிமுகவில் போஸ்டர் சண்டைகள் குறைந்திருந்த வேளையில், மீண்டும் போஸ்டர் யுத்தம் ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவரது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து போஸ்டர் ஒட்டும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோமாளி என்றும் பைத்தியம் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களால் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.