நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்க - சு.ஆ.பொன்னுசாமி

நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்க - சு.ஆ.பொன்னுசாமி

இன்று அதிகாலை 1 மணிக்கு வெளியான அஜித்தின் ‘துணிவு’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்ப்பதற்காக கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையங்கத்துக்கு சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (19) என்பவர் நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் உற்சாகத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். பரத்குமாரும் அவர்களோடு சேர்ந்து நடனமாடிக்கொண்டே அவ்வழியே மெதுவாக வந்த டேங்கர் லாரிமீது ஏறி நடனமாடினார். பிறகு இறங்குவதற்காக கீழே குதித்தபோது முதுகில் அடிபட்டு, சிகிச்சைப் பெற்று பலனில்லாமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து அச்சங்கத்தி நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நடிகர் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் இன்று (11.01.2023) வெளிவந்துள்ள, “துணிவு” திரைப்பட வெளியீட்டினை சென்னை, கோயம்பேடு, ரோகிணி திரையரங்கில் அதிகாலை வேளையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரியில் ஏறி நடனமாடிய பரத்குமார் என்கிற 19வயது ரசிகர் ஒருவர் கீழே விழுந்ததில் முதுகுத் தண்டுவடம் உடைந்து நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. 

ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக கூறி தொடர்ந்து ரசிகர்களை புறக்கணித்து,  அவர்களை நல்வழிப்படுத்த தவறும் நடிகர் அஜித்குமார் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படத்தில் நடித்து கோடி, கோடியாய் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் அவர் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மரணமடைந்த ரசிகரின் குடும்பத்திற்கு அஜித்குமார் அவர்கள் ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, தனது பொறுப்பற்ற தன்மைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com