யானையை கையால் நிறுத்த முயன்றவருக்கு ரூ.10,000 அபராதம்!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் எருங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது முருகேசன், இவர் கடந்த மே 10 ஆம் தேதி, பென்னாகரம், ஒகனேக்கல் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த காட்டு யானையின் அருகில் சென்றிருக்கிறார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாககத் தகவல்.
யானையின் அருகே சென்றவர் தன் இருகைகளையும் உயர்த்தி முதலில் யானையை நிறுத்தி பின் அதை வணங்க முயற்சித்திருக்கிறார். காட்டு விலங்கான யானையின் அருகில் ஆபத்தான முறையில் சென்று கைகளை உயர்த்தி அவர் வழிபடும் காட்சியை யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள்.
காடுகளைப் பொருத்தவரை ஒற்றை யானையின் அருகில் மனிதர்கள் தனியாகச் செல்வது ஆபத்தான விஷயமாகக் கருதப்படுகிறது.
முருகேசன் தன் அருகில் வருவதைக் கண்டதும் காட்டு யானை முதலில் அச்சத்துடன் பின்வாங்கியது.அப்போதும் முருகேசன் அங்கிருந்து செல்லாமல், யானை முன்பு வணக்கத்தில் ஈடுப்படவே யானை அவரைத் தாக்க முயற்சிக்கிறது . அந்த வழியாகச் செல்லும் மக்கள் எச்சரித்த போதும் முருகேசன் அதை அலட்சியப்படுத்தி இப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருக்கறார்.
இந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியதும் வனத்துறையினர் முருகேசனைக் கைது செய்தனர். அவர் மீது வனவிலங்கியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, காட்டு யானைக்கு இடையூறு ஏற்படுத்தீயதற்காக ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.