முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கு - உடன் பிறந்த தம்பி ஆசம் பாஷா கைது!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கு - உடன் பிறந்த தம்பி ஆசம் பாஷா கைது!

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது உடன் பிறந்த தம்பி ஆசம் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆசம் பாஷாவின் மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த முன்னாள் ராஜ்யசபா எம்பி மஸ்தான், கடந்த மாதம் 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு பின்பு நெஞ்சு வலியால் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் நடத்திய விசாரணையில் மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மஸ்தானுடன் காரில் பயணம் செய்த அவர் தம்பி மருமகன் இம்ரான் மற்றும் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 இந்த நிலையில் மஸ்தானின் உடன் பிறந்த தம்பி, ஆசம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதைக் கண்டித்து ஆசம் பாஷாவின் மனைவி ஜூனத் பேகம் டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “எனது கணவர் ஆசம்பாஷா பெரியபாளையத்தில் எஸ்.எஸ்.கிளினிக் ஆசம் மருத்துவமனை வைத்து மேற்பார்வையாளராக இருக்கிறார்.

 மஸ்தானின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள  தமிழக முதல்வர் வந்திருந்தபோது மஸ்தானின் மனைவி முதல்வரிடம் எனது கணவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் . எனது கணவரின் தம்பி ஆசம் பாஷா மற்றும் அவரது மருமகன் இம்ரான் இருவரும் தான் இந்த கொலையை செய்தனர் என புகார் கூறினார்.

அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்துறை எனது மருமகன் இம்ரான் தமீம், நசீர், தலகீத் அஹ்மத் லோகேஷ்வரன் ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 எனது மருமகன் இம்ரான் 15 லட்சம் ரூபாய் முன்னாள் எம் பி மஸ்தானிடம் இருந்து கடனாக வாங்கி இருந்தார். அந்த பணத்தை மஸ்தான் திரும்பி கேட்டதால் தனது நண்பர்களை வைத்து கொலை செய்தனர் என தகவல் பரவியது.

இந்நிலையில் நேற்று 12-01-2023 எனது கணவர் ஆசம் பாஷாவை கூடுவாஞ்சேரி காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று தனது சகோதரர் மஸ்தானை மருமகன் இம்ரானை வைத்து சொத்துக்காக கொலை செய்ததாக குற்றச்சாட்டு கூறி கைது செய்துள்ளனர். ஏற்கனவே மருமகன் இம்ரான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் சூழ்நிலையில்,  எனது கணவர் ஆசம் பாஷாவையும் கைது செய்துள்ளனர்.

 மரணம் அடைந்த முன்னாள் எம் பி மஸ்தானுக்கும், எனது கணவர் ஆசம் பாஷாவுக்கும் இதுவரை எந்தவித கருத்து வேறுபாடும் இருந்ததில்லை.

மஸ்தான் குடும்பத்தினர் தேவையில்லாமல் எனது கணவர் ஆசம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை சம்பந்தப்படுத்தி புகார் கொடுத்து, அதன்படியே காவல்துறை நடந்து கொள்வதாக நான் நினைக்கிறேன்.

எனவே இந்த வழக்கை உடனே சிபிசிஐடி புலனாய்வு துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் . எனது கணவர் ஆசம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என  வலியுறுத்துகிறேன்” என ஆசம் பாஷாவின் மனைவி ஜூனத் பேகம் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com