அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சங்கள் மோசடி.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சங்கள் மோசடி.

ம்பிக்கை என்பது வேண்டும்தான். ஆனால் தகுதியற்றவர் மீதுவைக்கும் நம்பிக்கை இப்படித்தான் பணத்தை இழக்க வைக்கும். அரசுப் பணி கிடைத்தால் சலுகைகளுடன் வாழ்க்கை முழுவதும் காசுக்கு கவலையற்று இருக்கலாம் என்பதே பெரும்பாலான மக்களின் கனவு. இந்தக் கனவை நிஜமாக்குவதற்காக எவரவரோ கூறும் பொய்களையும் உண்மை என நம்பி ஏமாந்து போகின்றனர். எதையும் உடனே நம்பி விடாமல் தீர விசாரித்து அதன் பின் நம்புவதுதான் புத்திசாலித்தனம். இதோ இந்த செய்தி அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
     சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தில் நான்கு பேரிடம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு கொடுத்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது.

    “நான் கூலி வேலை செய்து வருகிறேன் என்னுடைய மகள் ஜோதி பிஎஸ்சி முடித்துள்ளார். அவருக்கு அரசு வேலைக்காக முயற்சி மேற்கொண்டு வந்தேன். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு உறவினர் ஒருவர் மூலம் சேலம் மூன்று ரோடு பகுதியை சேர்ந்த சின்னான் என்பவர் அறிமுகமானார். அவரிடம் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டேன்.

     அதற்கு அவர் மாரமங்கலத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் மூலம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். மேலும் அவர் இதற்காக ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் மூன்று மாதத்தில் அந்த வேலையை வாங்கி தருவதாக தெரிவித்தார். இதை உண்மை என நம்பி நான் அவர்களிடம் ரொக்கமாகவும் வங்கிமூலமாகவும் 10 லட்சம் கொடுத்தேன்.

      இதையடுத்து அவர்கள் போலி பணி நியமன ஆணை தயாரித்து அதை எனது   செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினர். இதற்கிடையில் திடீரென கௌதம் எனக்கு போன் செய்து தற்போது கொரோனா காரணமாக பணி நியமனம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அழைக்கும்போது சென்றால் போதும் என்று தெரிவித்தார்.

    பின்னர் இது தொடர்பாக விசாரித்த போது சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மூலம் எனது மகளுக்கு போலி பணி நியமனம் ஆணை வழங்கியது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சேலம் மாநகர குற்றப்பிரிவு காவலருக்கு  கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் கவுதம், சின்னான், மகேஸ்வரி, ஆகியோர் சேர்ந்து சுதா உள்பட மேலும் நான்கு பேரிடம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 10 லட்சம் விதம் 40 லட்சம் வாங்கியும் அவர்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியும் மோசடி செய்ததாக தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட சின்னான், கவுதம், மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சுயமாக முயற்சித்து பணிகளைப் பெறுவதே நல்லது. பதவியைக் காண்பித்து அந்த வேலையைப் பெற்றுத் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி பணத்தை வாங்கி மோசடி செய்பவர்கள் பெருகிவிட்ட சூழலில் பணத்தை தரும் முன் யார் அவர்கள் என ஆராய்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தானே தவிர அவர்கள் அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com