
சென்னைக்கு அடுத்த வந்தே பாரத் ரயில் தயாராகிவிட்டது. சென்னை – கோவையைத் தொடர்ந்து அடுத்து சென்னை – விஜயவாடா வழியில் அடுத்த வந்தே பாரத் ரயில் அறிமுகமாகிறது. ரேணிகுண்டா வழியாக விஜயவாடா செல்ல 8 மணி நேரம் ஆகும் நிலையில், பயண நேரம் ஆறரை மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
வரும் வெள்ளியன்று தொடங்கிவைக்கப்படும் விஜயவாடா வந்தே பாரத் சேவை, மறுநாள் முதல் தினமும் ஒரு சேவையாக மேற்கொள்ளப்படுகிறது. ஜீலை 7 வெள்ளியன்று இணைய வழியின் மூலமாக பிரதமர் கொடி அசைத்து, வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டுக்கான மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கிளம்பும் நேரம், சென்றடையும் நேரம் உள்ளிட்டவை நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நெல்லூர் வழியாக செல்லும் வழியை தவிர்த்துவிட்டு ரேணிகுண்டா வழியாக ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவிலிருந்து கிளம்பும் ரயில், கூடுர், ரேணிகுண்டா, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இதன் மூலம் திருப்பதி மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகளும் பயனடைவார்கள் என்று தெரிகிறது. சென்னை சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலை விட சென்னை விஜயவாடாவில் தென்னிந்தியாவில் நான்கு மாநில மக்களும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரை வந்தே பாரத் ரயில் விசாகப்பட்டினத்திற்கும் செகந்திரபாத்திற்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது. செகந்திரபாத்திற்கும் திருப்பதிக்கும் இடையேயான இன்னொரு சேவையும் இருந்து வருகிறது. இவை இரண்டும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க, விஜயவாடா மண்டலத்தை சேர்ந்த ரயில்வே அதிகாரிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் பேசி ரேணிகுண்டா வழியாக ரயிலை இயக்குவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லூர், ஓங்கோல் வழியாக விஜயவாடாவுக்கு பயணம் செய்தால் அதே ஆறரை மணி நேரம்தான் ஆகும் என்கிறார்கள், பயணிகள். ஓடிசா, மேற்கு வங்கம் வழியாக செல்லும் கொரமண்டல்ர எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஒங்கோல் வழியாகவே விஜயவாடாவுக்கு செல்கின்றன. ஆகவே, சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு செல்பவர்களுக்கு பெரிய அளவில் வந்தே பாரத் பலனளிக்காது என்கிறார்கள்.