உயிருடன் இருக்கும் பக்தருக்கு இறுதிச் சடங்கு!

உயிருடன் இருக்கும் பக்தருக்கு இறுதிச் சடங்கு!

ந்து மத தெய்வங்களுக்கு பல விதமான வேண்டுதல்கள் எனப்படும் நேர்த்திக்கடன்களை செய்வது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வேண்டுதல்களின் பலமே தங்கள் வாழ்வை செம்மையாக நகர்த்திச் செல்வதாக நினைக்கின்றனர். அவரவரின் மனோவலிமை மற்றும் சோதனைகளுக்கு ஏற்ப வேண்டுதல்களும் மாறுபடுகிறது. அதிலும் சில நேர்த்திக்கடன்கள் மற்றவர்களை ஆச்சர்யப் படுத்தும் விதமாக அமைவதுண்டு. அப்படிப்பட்ட நேர்த்திக்கடன் பற்றிய சுவாரஸ்யமான செய்திதான் இது.


         சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவில் வினோத நேர்த்திக்கடனாக உயிருடன் இருக்கும் பக்தருக்கு இறுதிச்சடங்கு சம்பவம் ஊர்வலம் நடத்தியதுதான் பரபரப்பைத் தருகிறது. ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பக்தர் ஒருவர் பிணக்கோலத்தில் படுத்த நிலையில் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்.

      அதற்காக நேற்று காலையில் அந்த பக்தர் படுக்கையில் பிணம் போல் கழுத்தில் சுமந்த மாலைகளுடன்  படுத்தபடி ஆடாமல் அசையாமல் இருந்தார். இந்த வினோத நேர்த்திக்கடனுக்காக கொண்டலாம்பட்டி பேருந்து நிலைய நிறுத்தத்தில் பந்தல் ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. அங்கு பிணம் போன்று படுத்திருந்த பக்தருக்கு செத்தவருக்கு செய்வது போலவே அனைத்து இறுதி சடங்குகளையும் உடனிருந்த உறவினர்கள் மற்றும் மற்ற பக்தர்கள் செய்தனர்.  மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் போல வந்து துக்கம் விசாரித்து சென்றனர்.

     அனைத்து சடங்குகளும் நிறைவேறிய பின் பாடையில் பக்தரை தூக்கி  பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சரக்கு வாகனம் ஒன்றில் வைத்து இறுதி ஊர்வலமாக தெருத்தெருவாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து மயானத்திற்கு ஊர்வலம் சென்று அடைந்தது.  அங்கு பாடையை இறக்கிவிட்டு கையோடு கொண்டு சென்ற ஒரு கோழியை மட்டும் புதைத்து விட்டு அங்கிருந்து அனைவரும் கோவிலுக்கு திரும்பி வந்தனர்.

     அங்கு பிணம் போன்று படுத்து நேர்த்திகடன் செய்த பக்தர் உள்பட அவருடன் வந்தவர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டு சென்றனர். இந்த  வினோத நேர்த்திக்கடன் பொதுவெளியில் நிகழ்ந்ததால் மக்களின் கவனத்துக்கு வந்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com