விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு!
வங்கதேசத்தில் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது ஒளிந்து கொள்வதற்காக கண்டெய்னருக்குள் போய் மாட்டிக்கொண்ட சிறுவன் 3,500 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் மலேசியா துறைமுகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகர துறைமுகப் பகுதியில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி 15 வயதுள்ள சிறுவன் ஃபஹிம் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒளிந்து கொள்வதற்காக அங்கிருந்த கண்டெயினர் ஒன்றினுள் ஒளிந்துகொண்டிருந்த ஃபஹிம் விளையாடிய அசதியில் அப்படியே உறங்கிவிட்டான்.
இதற்கிடையே ஃபஹிம் உள்ளே தூங்குவதை அறியாமல் கண்டெயினர் லாரி மலேசியாவுக்குப் புறப்பட்டுவிட்டது. இதனால் ஃபஹிம் அந்த கண்டெயினருக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டான்.
ஆறு நாட்களாக கண்டெயினருக்குள்ளேயே உணவு ஏதும் இல்லாமல் பசியோடு இருந்ததால் காய்ச்சலும் வந்துவிட்டது. பின்னர் ஜனவரி 17ஆம் தேதியன்று கண்டெயினர் மலேசியா சென்றதும், அங்கிருந்த துறைமுக அதிகாரிகள் கண்டெயினருக்குள் இருந்த சிறுவனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவன் காப்பாற்றப் பட்டான். மலேசிய காவல் துறையினர் முதலில் சிறுவனை யாரேனும் கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு, விளையாடும் போதுதான் கண்டெயினருக்குள் ஒளிந்துகொண்ட சிறுவன் அப்படியே தூங்கியதால் உள்ளேயே சிக்கிகொள்ள நேர்ந்ததை உறுதிபடுத்திக்கொண்டனர்.
பின்னர் சிறுவனின் உடல்நிலை நன்கு தேறியதும் வங்கதேசத்துக்கு பத்திரமாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.