திருநாங்கூரில் கருட சேவை உற்சவம்… பெருமாள்கள் வீதியுலா!

திருநாங்கூரில் கருட சேவை உற்சவம்… பெருமாள்கள் வீதியுலா!

முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் விஷ்ணு எழுந்தருளியுள்ள தொன்மையான ஆலயங்கள் நகரெங்கும் 108 திவ்ய தேசங்களாக பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாகிறது. அவற்றில் 11 திவ்யதேசங்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் ஒருசேர அமைந்துள்ளது வெகு சிறப்புக்குரிய விஷயம்.
        இந்த 11 திவ்யதேசங்களையும் தரிசித்து பெருமாளின் அருளைப் பெற இங்கு  ஆண்டுதோறும் தை மாத அமாவாசைக்கு மறுநாள் வெகு விமரிசையாக நடைபெறும் கருடசேவை உற்சவத்தின்போது  மக்கள்  திரளாகக் கூடுவது வழக்கம்.
         அதன்படி இந்த வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில்  நடந்த கருட சேவை உற்சவத்தில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன் பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுந்த நாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் கண்ணைக் கவரும் ஆடை அணிகலன்களுடன் அலங்காரமாக மணிமாட மண்டபத்தில் எழுந்தருளினர்.
        முன்னதாக எதாஸ்தானத்தில் இருந்து நாராயண பெருமாள் எழுந்தருளி மணிமாற கோயிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடந்தது. தொடர்ந்து ஹம்ச வாகனத்தில் மணவாள மாமுனிகள் சதவீதம் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி பெருமாள்களைப் பற்றி அவர் பாடிய பாடல்களைப் பட்டாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பாட திருப்பாவை மங்களசாசனம்  வைபவம் நடந்தது.

இரவு 12 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நாராயண பெருமாள் கோயில் வாயிலில் எழுந்தருளிய 11 பெருமாளுகளுக்கும் ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி நடந்த மகாதீபாராதனையை அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷம் போட்டபடி வழிபட்டனர்.
        தீபாராதனைக்குப்பின் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நான்கு வீதிகளின் வழியாக மேளதாளங்கள்  வாண வேடிக்கையுடன் இரவு முழுவதும் திருவீதி உலா வந்தனர். விடிய விடிய நடந்த இந்தச் சிறப்பு வீதி உலாவில் பக்தர்களும் பங்குபெற்று கோவிந்தன் கோஷம் மற்றும் பாசுரங்கள் பாடி மகிழ்ந்தனர்.
         வருடம் தோறும் நிகழும் சிறப்புமிக்க இந்தக் கருடசேவை உற்சவத்தில் காண பல்வேறு ஊர்களிலி ருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 108 திவ்ய தேசங்களுக்கும் செல்லமுடியாத சூழல் உள்ள பெருமாள் பக்தர்கள் திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களைச் சென்று தரிசித்து பெருமாள் அருளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com