பற்களை பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையிலான சிறப்பு விசாரணை இன்று முதல் ஆரம்பம்!

பற்களை பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையிலான சிறப்பு விசாரணை இன்று முதல் ஆரம்பம்!

கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கூடவே சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக முதன்மைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சார் ஆட்சியர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் உள்ளிட்ட மற்ற காவல் நிலையங்களிலும் பலருக்கு பற்கள் பிடுங்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்திருப்பதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதன்மைச் செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணை தொடர்பாக உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே விசாரணையை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தொடங்கிவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டடத்தில் நெல்லை ஆட்சியர் கலந்து கொண்டிருக்கிறார். முதல் கட்டமாக பத்து பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் முதன்மைச் செயலாளரை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது-

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்று முழுவதும் நடைபெறவிருக்கும் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களோடு, இதுவரை புகார் அளிக்காதவர்களும் முன்வந்து பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நிறைய பேர் புகார் அளிக்க தயங்குகிறார்கள். சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதாகவும், அதன் காரணமாகவே பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக போஸ்டர்களும், மக்களின் கருத்துக்களும் வெளியிடப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. பல்வீர் சிங்கின் பல் பிடுங்கும் நடவடிக்கைள் அனைத்தும் திட்டமிடப்பட்டவையாகவே இருந்திருப்பதாக உள்ளூரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த அனைத்து நிலையங்களிலும் பல் பிடுங்கும் கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார். சம்பந்தபட்ட காவல்நிலையத்தைச்

சேர்ந்தவர்களும் அதைத் தடுக்காமல் உடந்தையாக இருந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பற்களை அகற்றும் நிபுணர்கள் போல் விதவிதமான கருவிகளை பயன்படுத்தி பற்கள் பிடுங்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் நிஜமாகவே அதிர்ச்சியளிக்கின்றன.

சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இன்னும் சிலர் புகார் அளிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் காத்திருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com