கடலில் வீசப்பட்ட தங்கம்?: தேடுதல் வேட்டை தொடங்கிய பாதுகாப்புத் துறை!

கடலில் வீசப்பட்ட தங்கம்?:
தேடுதல் வேட்டை தொடங்கிய பாதுகாப்புத் துறை!

லங்கையில் இருந்து மன்னார்வளைகுடா கடல் வழியாக தங்கம் கடத்திக்கொண்டு மண்டபம் பகுதிக்கு படகு ஒன்று வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்தியக் கடலோர காவல் படையினர் நேற்று இரவு மண்டபம் தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்டபத்தைச் சேர்ந்த மீன்பிடி பிளாஸ்டிக் படகு ஒன்று தெற்கு மீன்பிடி துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்தப் படகை நிறுத்தி சோதனை செய்ய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முயன்றபோது, படகில் இருந்தவர்கள் ஒரு மர்மப் பொருள் அடங்கிய பையை கடலில் வீசி உள்ளனர்.

அதையடுத்து, அந்தப் படகை மடக்கிப் பிடித்த இந்திய கடலோர காவல் படையினர், படகில் இருந்த மூன்று பேரை பிடித்து மண்டபத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர்கள் வேதாளையைச் சேர்ந்த ஒருவருக்காக இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடந்திக்கொண்டு வந்ததாகவும், காவல் படையினரைக் கண்டதும் அதை கடலில் வீசி விட்டதாகவும் கூறியுள்ளனர் என்று தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து கடலில் வீசப்பட்ட அந்த மர்மப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இன்று அதிகாலை முதல் தேடி வந்தனர். அதில் பயன் ஏதும் கிடைக்காததால் தற்போது ஸ்கூஃபா டைவிங் மற்றும் கடல் விளையாட்டு வீரர்களைக் கொண்டும் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தியும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதோடு, கடலில் வீசப்பட்ட அந்த மர்மப் பொருளை மீனவர்களோ மற்றும் வேறு யாரேனும் எடுத்துச் செல்லாமல் இருக்க மண்டபம் தெற்கு கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி கடல் வழியாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கடத்த வரப்பட்ட இந்த சம்பவம் மத்திய, மாநில அதிகாரிகள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதேசமயம் கடலில் வீசப்பட்ட மர்மப் பொருள் தங்கம்தான் என்பதை இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்யவில்லையாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com