சென்னை தீவுத்திடலில் கைத்தறி கைவினை பொருட்கள் திருவிழா! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கம்!

சென்னை தீவுத்திடலில் கைத்தறி  கைவினை பொருட்கள் திருவிழா! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கம்!

சென்னை தீவுத்திடலில் கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா-2023' கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திருவிழாவுக்காக 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த திருவிழாவை தொடங்கி வைத்து கண்காட்சியை திறந்து வைத்தார்., கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அரங்குகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு அவற்றின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, கா.ராமச்சந்திரன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியை பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 அரங்குகளில் வங்காளம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, உகாண்டா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இது தவிர 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். அதேபோன்று தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டு சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்-டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் இடம் பெற்றிருந்தன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி அரங்கில் மண்பானை செய்து விற்பனை செய்யப்பட்டது. மண்பானை செய்வது எப்படி? என்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து காண்பித்தனர்.

அதனை ஆர்வமுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செய்து பார்த்தார்.

இதேபோன்று கண்காட்சி அரங்கிலேயே மஞ்சள் பை தயாரித்து வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப்பையை தூக்கி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com