கத்தி போட்ட வீர குமாரர்கள்!

கத்தி போட்ட வீர குமாரர்கள்!

ன வலிமையுடன் ஆன்மிக நம்பிக்கையும் சேரும்போது எந்த வேண்டுதல்களும் சாத்தியமே. அப்படி உருளதண்டம், அடிப்பிரதட்சணம், அலகு குத்துதல், தீ மிதித்தல், போன்ற உடலை வருத்திச் செய்யும் வேண்டுதல்களில் ஒன்றுதான் உடலில் கத்திப் போடும் வீரகுமாரர்களின் நேர்த்திக்கடனும்.
         சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலும் ஒன்று. அங்குதான் ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். வருடந்தோறும் தை முதல் நாளில் இக்கோயிலில் திருவிழா நடைபெறும். அதன் அடிப் படையில் இந்த ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டது. இந்த வருடம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா என்பதுதான் சிறப்பு.
        இந்தச் சிறப்பான நாளில் அதிகாலை 4 மணி முதல் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் தரப்பட்டது.  தொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் உலகம் நன்மை பெறவும்,  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், திருமண வரம் வேண்டியும், மழலைப்பேறு வேண்டியும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரக்குமாரர்களாக மாறி, காலில் சலங்கைகள் கட்டி, மஞ்சள்  ஆடை அணிந்து மார்பிலும் முதுகிலும் கத்தி போட்டு ஆடி ஊர்வலமாக சென்றபடி அம்மனை வரவேற்றனர். இதில் 5 வயது பாலகர்கள் முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் கலந்துகொள்கின்றனர்.
         ஆடல் பாடலுடன் மார்பிலும் கையிலும் கத்தியால் காயத்தினை ஏற்படுத்தி, நான் போடுகிறேன் நீ ஏற்றுக்கொள் என அர்த்தம் தரும் "வேசுகோ தீசுகோ"  கோஷங்கள் எழுப்பியவாறு அம்மனை அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரர்கள் சேலம் குகை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு  அம்மனை அழைத்து ஊர்வலமாக சென்றதை வழி நெடுகிலும் இருந்த திரளான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
        இந்த ஊர்வலத்தின்போது சிவன், பெருமாள் போன்ற தெய்வ வடிவங்களைத் தத்ரூபமாக வேடமிட்டும் வந்தது வெகு சிறப்பு. ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரகுமாரர்களின் கத்திப் போடும் நிகழ்ச்சி அனைத்து சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஆன்மிக நிகழ்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com