பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையை கலைத்துவிடுவோம், அண்ணாமலை அதிரடி!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையை கலைத்துவிடுவோம், அண்ணாமலை அதிரடி!

பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, இந்து கோயில்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம். ஆனால், முடிவுகளில் தலையிடக் கூடாது. குத்தகை என்னும் பெயரில் கோவில் நிலங்கள் பிறருக்கு தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கு 4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் அதன் சொத்து விபரங்களை பொதுவெளியில் பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் மாநில அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது என்று பேசியதோடு, கோயில் தணிக்கை பற்றியும் பேசியிருக்கிறார்.

கோயில் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதற்காக தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், தணிக்கை செய்வதற்கான செலவையே அதிகமாக பெற்றுள்ளனர். தமிழக அரசு தணிக்கை செலவு என கோயில்களிலிருந்து 2018-19 ஆண்டில் ரூ.92 கோடி, 2019-20 ஆண்டில் ரூ.87 கோடி, 2020-21 ஆண்டில் ரூ.70 கோடி பெற்றுள்ளது. தணிக்கைக்கு உண்டான செலவை விட 4 மடங்கு அதிகமான பணம் செலவாகியிருக்கிறது.

தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. தமிழக கோயில்களிலிருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால், வருமானத்தின் உண்மை நிலையை தமிழக அரசு மறைத்துவிடுகிறது. கோயில்களின் நிர்வாகத்திலிருந்து அரசை வெளியேற்றவேண்டும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அண்ணாமலையின் பேச்சு பற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். "பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது. ஆதாரமற்ற பேச்சுக்களை பற்றி கவலைப்படவில்லை. உரிய சான்றுகளுடன் குற்றம்சாட்டினால் அதற்குரிய விளக்கங்களை அளிக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று சேகர் பாபு பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்தும், அறநிலையத்துறை அமைச்சரின் பதில் குறித்தும் நாம் தமிழர் நிறுவனர் சீமானிடம் கேட்டபோது, "அறநிலையத்துறையை மூடிவிட்டால் இப்போது நடப்பதை விட இன்னும் பல மோசடிகள் அதிகமாக இருக்கும் என்றவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை என்னும் பெயரை தமிழர் சமய அறநிலையத்துறை என்று மாற்றுவோம்" என்றார். சிக்கலான பிரச்னைகளுக்கு நம்மூர் அரசியல்வாதிகள் எப்போதும் தருவதும் எளிய தீர்வுகள்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com