ஆயிரத்தை தாண்டினால் ஆன்லைன் கட்டணம்- மின்சார வாரியம்!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின்சார பயன்பாடு இனி 372 யூனிட்டுகளுக்கு மேல் அதாவது ஆயிரம் ரூபாயை தாண்டினால் மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாட்டு மின்சார வாரியம் அதிரடியான முன்மொழிவு ஒன்றை அரசுக்கு வழங்கியுள்ளது. அதில், தமிழ்நாடு மின்சார வாரியம் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக்கட்டணம் வசூலித்து வருகிறது. அதன்படி பொது மக்கள் மின்கட்டணங்களை நேரடியாக அலுவலகத்தில் உள்ள கவுண்டர்களிலும் ஆன்லைன் வழியாகவும் செலுத்திவருகின்றனர். அதேபோல் வணிக பயன்பாடு மற்றும் அலுவலகங்களுக்கான மின்கட்டண தொகை அதிகமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக செலுத்தும் நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.
அதன்படி மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதனை ஆன்லைன் வழியாகவோ அல்லது அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். அதுவும் கெடு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே செலுத்திவிடவேண்டும்.
இந்நிலையில் தற்போது வீட்டு உபயோக மின்சார பயணாளர்களும் மின்சார கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சென்றால் அதனை ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை ஆகிய இணையவழி மற்றும் வங்கி பரிவர்த்தனை மூலமாக மட்டும்தான் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டாயிரத்திற்கும் மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வந்தால் ஆன்லைன் மூலமாக செலுத்தும்படி கூறி திருப்பி அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து வாய்மொழி உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மின்சார வாரியம் முன்மொழிந்துள்ள இந்த யோசனைகளை அரசு ஏற்றுக்கொண்டால் இனி மின்வாரிய அலுவலகங்களில் கட்டணம் செலுத்த மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதேபோல் மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் தேவையற்ற பணத்தை கையாளுவதை தவிர்க்கவும் உதவும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம், ஆன்லைன் மூலமாக மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் ஆன்லைன் மூலமாக மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டும் என கூறப்படுகிறது.