‘மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகி விடுமா?’ எஸ்.வி.சேகர் வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

‘மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகி விடுமா?’ எஸ்.வி.சேகர் வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையான பேச்சுப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எஸ்.வி.சேகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி, தேசியக்கொடி அவமதிப்பு வழக்கும் இவர் மீது தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இவர் மீது அதிருப்தி தெரிவித்ததோடு, ‘இது அருவருக்கதக்கச் செயல்’ எனக் கூறி நடிகர் எஸ்.வி.சேகரை கண்டித்தது.

இந்த நிலையில், எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதோடு, தம் மீதான வழக்கை ரத்து செய்யும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சையான பேச்சு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ‘அவதூறான கருத்துக்களைக் கூறிவிட்டு உடனே அதற்கு மன்னிப்பு கோரிவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறு இல்லை என்றாகி விடுமா? ஏற்பட்ட பாதிப்பை மன்னிப்பின் மூலம் சரிக்கட்டிவிட முடியாது. தகவலை பகிர்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு’ என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை திட்டவட்டமாக மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம், தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்குகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com