பெண்கள் விடுதியில்: செல்போனில் பேசிய 3 பேருக்கு மின்சாரம் தாக்கி காயம்

பெண்கள் விடுதியில்: செல்போனில் பேசிய 3 பேருக்கு மின்சாரம் தாக்கி காயம்

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, திருநீர்மலை ரோட்டில் இயங்கி வருகிறது நடராஜன் பெண்கள் விடுதி.

இவ்விடுதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி, கல்லூரிக்கு சென்றும், பணிபுரிந்தும் வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதால் பலரும் விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்கும் குமாரி(19) என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக இன்று காலை 9 மணியளவில் 3வது மாடிக்குச் சென்று அங்கிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது துணை மின்நிலையத்திற்கு செல்லும் 110 கேவி கொண்ட உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து கதிர்வீச்சு செல்போனில் தாக்கியதால் அப்பெண் 70% எரிந்து தீக்காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அதேபோல் கீழ்த்தளத்தில் உள்ள ஒரு அறையில் இரண்டு பெண்கள் செல்போனுக்கு சார்ஜ் போட்டவாறு பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் மின்சாரம் தாக்கி லேசான காயம் ஏற்பட்டது. அவர்களையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் இருந்த மற்ற அனைவரையும் பத்திரமாக அங்கிருந்து வேறு இடத்திற்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com