‘நீருக்கு அடியில் முதல் புல்லட் ரயில்’ இந்தியன் ரயில்வே அறிமுகம்!

‘நீருக்கு அடியில் முதல் புல்லட் ரயில்’ இந்தியன் ரயில்வே அறிமுகம்!

லகின் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல இந்தியன் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி வந்ததுதான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ‘விரைவில் முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை முதல் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் வரை இந்த புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும், இதற்காக 1.08 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறி இருந்தது. அதேசமயம் இந்தத் திட்டம் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை வெறும் 26 சதவிகிதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

ரயில்வே துறைக்காக நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று மத்திய அரசு விளக்கம் தரப்பட்டு உள்ளது. புல்லட் ரயில் திட்டம் இன்னும் நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதுகுறித்த முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது, நாட்டின் முதல் புல்லட் ரயில் மகாராஷ்டிராவின் தானே பகுதியையொட்டி 21 கி.மீ. தொலைவுக்கு நீருக்கு அடியில் பயணிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நீருக்கடியில் பயணிக்கும் முதல் இந்திய ரயில் என்கிற பெருமையை இது பெற இருக்கிறது. அதேபோல், நீருக்கடியில் செல்லும் இந்த பயணம் ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

மும்பையிலிருந்து புறப்படும் இந்த புல்லட் ரயில் மொத்தம் மூன்று நிறுத்தங்களில்தான் நிற்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்று, குஜராத் மாநிலத்தில் சூரத், சபர்மதி ஆகிய மூன்று நிறுத்தங்களில் மட்டுமே இந்த ரயில் நிறுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மற்றும் நீருக்கடியில் செல்லும் முதல் ரயில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த ரயிலின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com