சர்வதேச பூனை கண்காட்சி முதல் முறையாக சேலத்திலும்!

சர்வதேச பூனை கண்காட்சி முதல் முறையாக சேலத்திலும்!

வீட்டில் வளர்க்கப்படும் வாயில்லா ஜீவன்கள் நம் மீது கலப்படமற்ற அன்பைப் பொழிந்து நம் ஆயுளை நீட்டிக்க வைக்கும். நாய், பூனை, ஆடு, மாடு, அணில், மீன், கிளி போன்ற பறவைகள் இந்த செல்லப்பிராணிகள் வரிசையில் பொதுவானவையாக உள்ளது. நம் நாளை உற்சாகம் கொள்ள வைக்கும் இவைகளுக்கும் கணக்கெடுப்பு, மருத்துவம், போட்டிகள் என்று பிராணிகள் கண்காட்சிகள் தனியார் அமைப்புகளும், அரசும் நடத்தி வருகிறது.

செல்லப் பிராணிகளின் கண்காட்சிகள் பெரும்பாலும் பெரிய நகரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் முதல் முறையாக சர்வதேச பூனை கண்காட்சி சேலத்தில் நடைபெறப் போகிறது எனும் செய்தி சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் வசிக்கும் பூனைப்பிரியர்களுக்கு இனிக்கும் செய்தியாக உள்ளது.

ஜனவரி 29 அன்று நடைபெற உள்ள இந்த பூனை கண்காட்சியைத் துவக்கி வைக்கும் விதமாக போஸ்டர் வெளியிடும் நிகழ்வு மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்தது நடுவர்களான சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான் மற்றும் தீயா சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவருமான பெங்களூர் இ இ ஐ தலைவரான சுதாகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் முதல்முறையாக பூனைகளின் நலனுக்காக ஹூரைரா கேட் பிரான்சிஸ் அமைப்பை துவங்கி உள்ளனர். இதன் மூலம் பூனை உரிமையாளர்கள் பராமரிப்பாளர்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்களின்  வசமுள்ள பூனைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்,  வம்சாவளி பாதுகாப்பை ஊக்குவித்தல், கல்வி ஆராய்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டுப் பூனைகளின் நலனுக்காகவும், தமிழ்நாட்டுக்கென பிரத்யேகமாக பூனை வம்சாவளி பதிவேடு மற்றும் சர்வதேச அங்கீகாரம் என பல்நோக்கு பார்வையில் பல சேவைகளை தருகின்றனர்.

ஜனவரி  29 அன்று ஹுரைரா கேட் ஷோ சேலத்தில் நிகழ்த்த உள்ள  நிகழ்ச்சியில் போட்டிகளுடன் அனைத்து இனங்களையும் அடையாளம் காணவும் அவற்றை  பதிவு செய்யவும் மைக்ரோ சிப் வழங்கவும் மற்றும் அவற்றின் இனச் சான்றிதழ்களை வழங்கும் பல அம்சங்கள் நடைபெறுகிறது .மேலும்  போட்டிகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறும் பூனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் சர்வதேச நடுவர்கள் மூலம் வழங்க உள்ளனர்.

இந்த போட்டியில் பங்கு பெற தகுதி உள்ள பூனைகளாக இந்திய வம்சாவளி சார்ந்த பூனைகள்  லாங் ஹேர் பூனைகள் மற்றும் வெரைட்டி பூனைகளும் கலந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இரண்டு மாதத்திற்குள் உள்ள பூனைகள் கர்ப்பிணி பூனைகள் மற்றும் மகப்பேறு காலத்தில் உள்ள ராணி பூனைகள் இந்த போட்டியில் தகுதி பெறாது எனும் வரைமுறையையும்  வைத்துள்ளனர். முன்பதிவு செய்யும் பூனை குட்டிகளுக்கு மட்டும் இலவச தடுப்பூசி மூன்று மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை உள்ள குட்டிகளுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான முன்பதிவை ஜனவரி 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பூனை குட்டிக்கு பதிவு தொகை ரூபாய் 800, இரண்டு பூனைகள் வரை ரூபாய் 1000, 3 முதல் 5 பூனைகளில் ஒரு பூனைக்கு ரூபாய் 500 ம் பதிவுத்தொகையாக பெறப்படும் . விருப்பமுள்ள அனைத்து வகையான என பூனைகளும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

என்ன பூனைப் பிரியர்களே நீங்கள் விரும்பும் பூனையை கண்காட்சிக்கு அழைத்துச்சென்று அதன் திறமையை நிரூபிக்கத் தயார்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com